புதுதில்லி;
2019 மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் ஓரிடம் குறைந்தால் கூட கூட்டணியில் தொடர மாட்டோம் என்று பாஜக-வின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, பல மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகள் வெளியேறி இருப்பதால், பாஜக-வுக்கு ‘2014’-ஐ போன்ற வெற்றி கிடைப்பது சந்தேகம்தான் என்றும் அந்தக் கட்சி கூறியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் பாஜக-வின் முக்கியக் கூட்டணிக் கட்சியாக சிரோமணி அகாலிதளம் இருக்கும் நிலையில்,இக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான நரேஷ் குஜ்ரால், விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:2019-இல் பாஜக வெற்றிபெறுவது, அக்கட்சி தேர்தல் அமைக்கும் கூட்டணியைப் பொறுத்தே அமையும். மேலும், அந்த கட்சிக்கு வெற்றி அவசியம் என்றால் கூட்டணிக் கட்சிகளை மென்மையாக நடத்த வேண்டும். அதாவது வாஜ்பாய் பாணியில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மகாராஷ்டிரத்தில் நிச்சயமாக சிவசேனா கூடுதல் தொகுதிகளை கேட்கும். பீகாரில் நிதிஷ்குமாரும் அதிக தொகுதிகளை கேட்பார். அந்த வகையில், சிரோமணி அகாலி தளத்திற்கும் தொகுதிப் பங்கீட்டில் ஓரிடம் குறைந்தால்கூட பாஜக கூட்டணியில் தொடர மாட்டோம்.கடந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடுவுடன் அமைத்த கூட்டணியால் பாஜக அதிக இடங்களை வென்றது. இப்போது அந்த கூட்டணியும் முறிந்ததால், பாஜக முன்பு பெற்ற வெற்றியை, இந்த முறை பெறுவதே சந்தேகம்தான்.இவ்வாறு நரேஷ் குஜ்ரால் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.