தருமபுரி,
நீர்வரத்து அதிகரித்து வரும் காரணத்தால் ஒகேனக்கல்லுக்கு பயணிகள் யாரும் சுற்றுலா வர வேண்டாம் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரளா மற்றும் கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருப்பதால், பலத்த மழை பெய்து வருவதின் காரணத்தால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் நீர்வரத்து அதிகரித்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளது. காவிரி ஆற்றில் திறந்து விடப் பட்டுள்ள உபரி நீர் (வினாடிக்கு சுமார் 1 லட்சம் கனஅடி) தமிழகத்திற்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாய நிலை உள்ளது.

மேலும் இந்நீர்வரத்து படிப்படியாக உயரும் எனவும் எதிர்பார்க் கப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி மற்றும் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. மேலும் பரிசல் போக்குவரத்தும் தடை செய் யப்படுகிறது. இத்தடையானது நீர்வரத்து குறைந்து மறு உத்தரவு வரும் வரையில் நீடிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. நீர்வரத்து அதிகரித்து வரும் காரணத்தால் ஆற்றின் கரையோரம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் ஒகேனக்கல் வருவதை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுகுறித்து வருவாய்த்துறை, காவல்துறை, வனத்துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணித்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப் பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.