ஜெய்ப்பூர்;
இஸ்லாமிய அடையாளம் கொண்ட ஊர்ப்பெயர்களை மாற்றும் வன்மமான நடவடிக்கையில், ராஜஸ்தான் மாநில பாஜக அரசு இறங்கியுள்ளது.முதற்கட்டமாக 8 ஊர்களின் பெயரை மாற்றியுள்ள ராஜஸ்தான், மேலும் 27 ஊர்ப் பெயர்களை மாற்றப்போவதாகவும் அறிவித்துள்ளது.

2014 மக்களவைத் தேர்தலில், ‘வளர்ச்சி’ முழக்கத்தை கையிலெடுத்த மோடி அரசு – கடந்த 4 ஆண்டுகளில் ஏற்கெனவே இருந்த வளர்ச்சியையும் பின்னுக்குத் தள்ளி, மக்களிடம் அம்பலப்பட்டு நிற்கிறது. இந்நிலையில், 2019 மக்களவைத் தேர்தலுக்கு, வளர்ச்சி முழக்கம் உதவாது என்று முடிவுக்கு வந்த பாஜக, பகிரங்கமாக தனது மதவெறி நிகழ்ச்சி நிரலை கையிலெடுக்க தீர்மானித்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் ஏற்கெனவே இதுதொடர்பான சதிவேலைகள் துவங்கி விட்டன. அவற்றில், இஸ்லாமிய அடையாளத்துடன் இருக்கும் ஊர்ப்பெயர்களை இந்து அடையாளத்திற்கு மாற்றுவதும் ஒன்றாகும்.இதன் அடிப்படையிலேயே, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள முகல்சராய் ரயில் நிலையம், அண்மையில் ஜனசங்கத் தலைவரான ‘தீனதயாள் உபாத்யாயா ரயில் நிலையம்’ என்று மாற்றப்பட்டது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில், இஸ்லாமிய அடையாளத்தில் இருக்கும் 8 ஊர்களின் பெயர்கள், இந்து அடையாளத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக மியோன்கா பாரா என்ற ஊரின் பெயர், மகேஷ் நகர் என்று மாற்றப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகமும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.மேலும் 27 ஊர்களில் இருக்கும் இஸ்லாமிய அடையாளத்தை மாற்ற அரசு முடிவு செய்திருப்பதாகவும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதிக்காக பெயர்ப்பட்டியல் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே பகிரங்கமாகவே அறிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: