தீக்கதிர்

அரசுப் பேருந்துகள் சேதம் : ராமதாசிடம் இழப்பீடு கோரிய மனு விசாரணைக்கு ஏற்பு…!

மதுரை:
பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி காடுவெட்டி குரு மறைவின்போது பாமகவினர் அரசு பேருந்துகளைச் சேதப்படுத்தியதற்கு பாமக நிறுவனர் ராமதாசிடம் இழப்பீடு பெற உத்தரவிடக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவில், காடுவெட்டி குரு மறைந்த நாளில் அவரது ஆதரவாளர்களும் பாமகவினரும் வன்முறையில் ஈடுபட்டதில் 73 அரசுப் பேருந்துகள் சேத மடைந்ததாகவும் பொதுச்சொத்துக்களுக்கு ஏற்பட்ட இழப்பைச் சரிசெய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை; அரசுப் பேருந்துகளுக்கு ஏற்பட்ட இழப்பைப் பாமக நிறுவனர் ராமதாசிடம் பெற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.