புதுதில்லி:
2014-இல் ஆட்சிக்கு வந்த மோடி அரசு, ஆரம்பம் முதலே அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்தது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையை ஏற்க மறுத்தும், இது பயனளிக்காது; இந்திய பொருளாதாரத்தை பின்னோக்கி கொண்டுசென்று விடும் என்றும் ரகுராஜன் ராஜன் எச்சரித்தபோது, மோடி அரசு அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. வராக்கடன் அதிகரிப்பு குறித்த நடவடிக்கைகளிலும் ரகுராம் ராஜனுக்கு எதிராக மோடி அரசு நடந்து கொண்டது.

எப்படியாவது ரகுராம் ராஜனை பதவியிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்று மோடி அரசு துடித்தது. எதிர்பார்த்ததைப் போலவே ரகுராம் ராஜனும் ஒருகட்டத்திற்குப் பிறகு, அவராகவே பதவி விலகினார்.மிகவும் மகிழ்ச்சியடைந்த மோடி அரசு உடனடியாக தங்களுக்கு நெருக்கமான உர்ஜித் படேலை ரிசர்வ் வங்கி ஆளுநராக்கி, அடுத்த சில நாட்களிலேயே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது.

இவ்வாறு ரகுராம் ராஜன் பதவி விலகி 2 ஆண்டுகளாகி விட்ட நிலையில், அவருக்கு பாஜக மூத்த தலைவரான முரளிமனோகர் ஜோஷி, திடீர் கடிதம் ஒன்றை தற்போது எழுதியுள்ளார்.
வங்கி வராக்கடன்களை கட்டுக்குள் கொண்டுவர முரளிமனோகர் ஜோஷி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த குழுவின் சார்பாக இந்த கடிதத்தை எழுதியுள்ள ஜோஷி, வராக்கடன் பிரச்சனையில் அரசுக்கு உதவுமாறு ரகுராம் ராஜனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“இந்திய வங்கிகளின் வராக்கடன்கள் மிகவும் அதிகரித்துவிட்டன. இவற்றை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு எனது தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது. நீங்கள் பொருளாதாரத்துறையில் ஒரு நிபுணர் என்பதை நாங்கள் அறிவோம். அத்துடன் வராக்கடன்கள் குறித்து தங்களுக்கு நல்ல அனுபவம் உள்ளது. தற்போதுள்ள வங்கிகளின் வராக்கடன் நிலையை உங்களால் புரிந்து கொள்ள முடியும். எனவே, அதைக் கட்டுக்குள் கொண்டுவர, பொருளாதார நிபுணர் எனும் முறையில் தாங்கள் அறிவுரைகளை அளிக்க வேண்டும்” என்று ஜோஷி கேட்டுள்ளார்.அதாவது, தங்களால் விரட்டியடிக்கப்பட்ட ஒரு நபரிடம், வெட்கமே இல்லாமல் பாஜக தலைவர்கள் உதவி கேட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.