தீக்கதிர்

யானைகள் வழித்தடத்தில் சொகுசு விடுதிகள்: சீல் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

உதகை,
யானைகள் வழித்தடத்தில் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 11 சொகுசு விடுதிகளுக்கு சீல் வைக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் யானைகள் வழித்தடத்தில் அனுமதிஇன்றி சொகுசு விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது. இதனால் வன விலங்குகள் குடியிருப்புகளுக்குள் ஊடுருவி வருகின்றன. குறிப்பாக யானைகள், காட்டெருமை போன்ற விலங்குகள் ஊருக்குள் புகுந்துவிடுகிறது. கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் சிறுத்தைகள் முக்கிய சாலைகளில் நடமாடியது அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே, யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் என்பவர் வழக்குத் தொடுத்திருந்தார். சுமார் 2 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு 2011 ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. சுமார் 10 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், கடந்த ஜுலை மாதம் 12 ஆம் தேதி உச்சநீதிமன்றம், யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளைக் கணக்கெடுத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தது. மேலும், இந்த அறிக்கையை ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.

அதன்படி, உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், வியாழனன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், தற்போது யானைகள் வழித்தடத்தில் உள்ள 11 சொகுசு விடுதிகளுக்கு 48 மணிநேரத்திற்குள் சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளா வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.