ஈரோடு,
கொடுமுடி பகுதியில் பதிவு செய்யப்பட்ட அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி நஞ்சை கொளாநல்லி ஊராட்சியில் 6 கிராமங்களில் 600 குடும் பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். இவர்களில் 1,400 பேர் தேசிய கிராமப்புற ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களாக பதிவு செய்து வேலை அட்டைகள் வைத்துள்ளனர். இந்நிலையில் ஆக.9 (வியாழக்கிழமை) வேலைக்கு சென்றபோது பஞ்சாயத்து செயலாளர் பணி தள பொறுப்பாளர் மூலம் இன்றைக்கு இரண்டுகிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் வேலை, மீதி உள்ள 4 ஊர் மக்கள் வீட்டிற்கு செல்லலாம் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை கொடுத்தால் தான் வேலைக்கு வருவோம் என வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி கே.பி.கனகவேல் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்துசம்பவ இடத்திற்கு வந்த பஞ்சாயத்து செயலாளர் மற்றும் கொடுமுடி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் குறிப்பிட்ட ஊர்களுக்கு மட்டும் வேலை வழங்கும் நடைமுறையை கைவிட வேண்டும். வேலைக்கு வரவழைத்து அலைக்கழிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.அப்போது, இந்த வாரம் பதிவு செய்த இரண்டு கிராமங்களைச் சேர்ந்த 75 பேருக்கு மட்டுமே வேலை வழங்க முடியும். வரும் வாரத்தில் காளிங்கராயன் கல்வாயில் தண்ணீர் வருவதால் விவசாயிகளுக்கு வேலை வழங்க முடியாது என அதிகாரிகள் தரப்பில் பதிலளித்தனர். ஆனால், இதனைஏற்க மறுத்த தொழிலாளர்கள், பதிவு செய்யப்பட்ட அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஆவேசமாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.