மேட்டுப்பாளையம்,
பில்லூர் அணை நிரம்பி அதன் உபரி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டு வருவதால் ஆற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள் மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் புதனன்று மாலை அணை முழு கொள்ளளவான 100 அடியை எட்டியது. மேலும், தொடர் மழையால் அதன் நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக இருந்து வருகிறது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அதன் நீர்மட்ட உயரத்தை 97.5 அடியாக நிலைநிறுத்தும் விதமாக தற்போது உபரி நீர் அப்படியே பவானியாற்றில் வெளியேற்றப்பட்டது. இதன்படி, அணையின் நான்குமதகுகள் திறக்கப்பட்டு அணையின் நீர்வரத்தான வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் உபரி நீராக ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதன்பின் வியாழனன்று காலை  நீர்வரத்து சற்று குறைந்த காரணத்தினால் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானியாற்றின் வேகம் திடீரென அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பவானியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகளில் ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பாக இருக்கவும், யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன்பிடிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெருக்கெடுத்து ஓடும் பவானியாறு பவானிசாகர் அணையை சென்றடைவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயரும் நிலை உருவாகியுள்ளது. மேலும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக விளங்கும் பில்லூர் அணை தற்போதைய பருவமழை காரணமாக கடந்த இரு மாத காலத்தில் மட்டும் மூன்றாவது முறையாக நிரம்பியுள்ளது இப்பகுதி மக்களைமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.