பெங்களூரு:
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் கனஅடி நீர் தமிழகத்துக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.

கேரள, கர்நாடக மாநிலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கபினி அணையும் கிருஷ்ணராஜ சாகர் அணையும் ஏற்கெனவே நிரம்பியுள்ள நிலையில், அந்த அணைகளுக்கு வரும் நீர் முழுவதும் காவிரியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

கபினி அணையில் இருந்து வினாடிக்கு 90 ஆயிரம் கன அடி நீரும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடி நீரும் காவிரியாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அதிக அளவு நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கர்நாடகத்தில் காவிரிக் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நீர் வெள்ளியன்று இரவே தமிழகத்தின் எல்லையான பிலிக்குண்டை வந்தடைவதால், தமிழகத்திலும் தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.