திருச்சி:
திருச்சி திருவரங்கம் கோவில் சிலை கடத்தல் புகார் தொடர்பாக 6 வாரத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் மூலவர் சிலை திருடப்பட்டிருப்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், உற்சவர் சிலையும் பழங்கால பொருட்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பல முறை புகாரளித்தும் காவல்துறையும் இந்து சமய அறநிலையத்துறையும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு வியாழக்கிழமையன்று நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் கூறுகையில், 2012 இல் ஆகம விதிகளுக்குட்பட்டு திருவரங்கம் கோவில் சீரமைப்பு பணிகளில் சிலைகள் சீரமைக்கப்பட்டதாகவும் ஆனால், சிலைகள் மாயமானதாக கூறும் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை. ஆகம விதிகளுக்குட்பட்டுத்தான் அதிகாரிகள் கோவிலுக்குள் சென்று விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ள கோவில் நிர்வாகம், கடவுளுக்கும் தனி மனித சுதந்திரம் இருப்பதாக தெரிவித்தது.

இதனையடுத்து நீதிபதிகள், திருவரங்கம் கோவிலில் சிலை கடத்தல் புகார் தொடர்பாகவும் ஆயிரம் கால் மண்டபத்தையும் ஆய்வு செய்து 6 வாரத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: