ஜெர்மனியிலிருந்து பெங்களூரு விமான நிலையத்தில் வந்திறங்கிய மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக மே பதினெழு இயக்கம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் திருமுருகன் காந்தி பதிவு செய்துவிட்டு திரும்பிய போது, பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். வரும் ஞாயிறு அன்று பெங்களூரில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரணத்தினால் பெங்களூர் விமான நிலையத்தில் இன்று காலை வந்து இறங்கினார்.  இந்நிலையில் தூத்துக்குடி படுகொலையை ஐ.நாவில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளை காரணம் காட்டி திருமுருகன் காந்தியை பெங்களூரில் கைது செய்துள்ளனர்.. அடக்குமுறைகளை ஏவி போராட்டங்களை ஒடுக்கிவிட முயலும்
பாஜக அரசு மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அரசின் இந்த ஜனநாயக விரோத கைதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளனர்.
திருமுருகன் காந்தி மீது தேச துரோக வழக்கு நிலுவையில் உள்ளதால், அவர் எந்த விமான நிலையம் வந்தாலும் கைது செய்யும் படி லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக திருமுருகன் காந்தியை கைது செய்த போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை குறித்து ஏற்கனவே தமிழக போலீசாருக்கு தகல் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் கர்நாடக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.