புதுதில்லி, ஆக. 9-

சமூக ரீதியாகவும், கல்விரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ள தலித்/பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் குறித்து எந்த நடவடிக்கை எடுப்பதாக இருந்தாலும் மாநில அரசுகளையும் கலந்தாலோசிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் கூறினார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. திங்கள் கிழமையன்று மாலை 2017ஆம் ஆண்டு அரசமைப்பு (123ஆவது திருத்தச்)சட்டமுன்வடிவு மற்றும் 2017ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான தேசிய ஆணையம் (நீக்குதல்) சட்டமுன்வடிவு ஆகியவற்றின் மீது நடைபெற்ற விவாதத்தின்போது டி.கே.ரெங்கராஜன் பேசியதாவது:

“இந்தச் சட்டமுன்வடிவுகளின்மீது எண்ணற்ற திருத்தங்களைக் கொண்டுவந்திருப்பதற்காக முதற்கண் அமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் இந்தச் சட்டமுன்வடிவுகளின்மீது பேசத்துவங்குவதற்கு முன்னால், இவற்றின்மீது தென்னிந்தியாவின் பங்களிப்புகளை சற்றே நினைவுகூர்ந்திட விரும்புகிறேன். அது கேரளாவாக இருந்தாலும் சரி, அல்லது கர்நாடகாவாக இருந்தாலும் சரி, அல்லது தமிழ்நாடாக இருந்தாலும் சரி. அதிலும் முக்கியமாக,  தமிழ்நாடு நீதிக் கட்சி மற்றும் தந்தை பெரியார் பங்களிப்புகளை நினைவுகூர விரும்புகிறேன். சென்ற நூற்றாண்டில் அவர்களால் 1920களிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பங்கு, குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தின. இப்போது நாம் தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்றால், அது நீதிக்கட்சியும் தந்தை பெரியாரும் போராடிப் பெற்றுத்தந்தை உரிமைகள் என்று பொருளாகும். இவற்றை நான் மீளவும் நினைவுகூர்கிறேன். இப்போது இவர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.

அடுத்து, அரசின் அதிகாரம் குறித்து ஒரு சிலவார்த்தைகள். நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல, மாண்புமிகு உறுப்பினர் திரு ஹரிபிரசாத் அவர்களும் மிகச் சரிவாகவே குறிப்பிட்டதைப்போல, நான் அவருடன் என்னையும் இணைத்துக் கொள்கிறேன். மாண்புமிகு அமைச்சர் அவர்களே, நீங்கள் ஏற்கனவே மகளிர் குறித்து பரிசீலனை செய்திருப்பதைப்போல, திரு. ஹரிபிரசாத் மிகச்சரியாகக் குறிப்பிட்டதைப்போன்று சிறுபான்மையினர் குறித்தும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். முஸ்லீம்கள் மட்டுமல்ல, பயந்துவிடாதீர்கள். முஸ்லீம்கள் அல்லது சிறித்தவர்கள் அல்லது சீக்கியர்கள் அல்லது சமணர்கள் அல்லது வேறெந்த சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, பரிசீலனை செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்ததாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களை சமூக ரீதியாகவோ அல்லது கல்விரீதியாகவோ, பாதிக்கக்கூடியவிதத்தில் மத்திய அரசோ அல்லது மாநில அரசுகளோ பெரிய அளவிற்குக் கொள்கை முடிவுகள் எடுக்கம் சமயங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான தேசிய ஆணையத்தைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்று குறிப்பிட விரும்புகிறேன். ஆணையம் மாநிலத்தின் விருப்பத்திற்கு எதிராக எவ்விதமான முடிவையும் தன்னிச்சையாக எடுத்திடக்கூடாது என்பதே என்னுடைய கருத்தாகும். அரசாங்கம் மட்டும்தான் யார் சமூகரீதியாகப் பின்தங்கி இருக்கிறார்கள், கல்விரீதியாக பின்தங்கி இருக்கிறார்கள் என்று அடையாளம் காண முடியும்.

அடுத்ததாக, அரசமைப்புச்சட்டத்தின் நோக்கத்திற்காக, எந்த வகுப்பினரையாவது சமூகரீதியாகவும், கல்விரீதியாகவும் பொது அறிவிக்கை மூலமாக அறிவிக்க வேண்டியிருப்பின், குடியரசுத்தலைவர், சம்பந்தப்பட்ட மாநில அரசைக் கலந்தாலோசித்தும், மற்றும் அவ்வாறு தீர்மானம் செய்யப்பட வேண்டியது மாநில அளவில் என்றால் சம்பந்தப்பட்ட மாநில ஆளுநர், மாநில அரசைக் கலந்தாலோசித்து, அவ்வாறு அறிவித்திடவேண்டும் என்று விரும்புகிறேன்.

இது தொடர்பாக, சமீபத்திய அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புரையை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.  2017 ஏப்ரல் அலாகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புரையின் கட்டளையின்படி, பல்கலைக் கழக மானியக் குழுவால் ஓர் அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை மாண்புமிகு அமைச்சர் குறித்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.   அந்தத் தீர்ப்பு அமல்படுத்தப்படவில்லை. மட்டுமல்ல, அனைத்துக் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் பிற்படுத்தப்பட்டவர்கள் தேர்வு செய்யப்படுவது தொடர்பாக வாய்ப்பு கொடுக்க வலியுறுத்தி வலுவாக எதிர்ப்பினை அளித்துக்கொண்டிருக்கின்றன.

அடுத்து, நீங்கள் என்னதான் சட்டத்தை இங்கே நிறைவேற்றினாலும், அதனை அமல்படுத்திட எவரும் தயாராய் இல்லை என்றால், அதுதொடர்பாக இங்கே விவாதம் நடத்துவதில் என்ன பயன்?  நாம் அனைவரும் சட்டத்தை உருவாக்குபவர்கள். தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ் ஏடு ஒன்றைச் சுட்டிக்காட்டி இருக்கிறது. “தலித்/பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களில் ஆசிரியர் எண்ணிக்கைகள் திருப்திகரமான நிலையைவிட மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன என்பதைக் குறித்துக்கொள்ள வேண்டும்,” என்று அது கூறியிருக்கிறது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு அளித்துள்ள தரவின்படி, நூறு மத்தியப் பல்கலைக் கழக ஆசிரியர்களில் வெறும் ஏழு பேர்தான் மேலேகுறிப்பிட்ட சமூகத்தின் கீழ் வருகிறார்கள், அதாவது தலித்/பழங்குடி அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பின்கீழ் வருகிறார்கள், என்று கூறுகிறது.

மாநிலங்களவைத் தலைவர்: டி.கே.ரெங்கராஜன் ஜி, முடித்துக்கொள்ளுங்கள்.

டி.கே.ரெங்கராஜன்: இது மிகவும் முக்கியமான விஷயம்.

மாநிலங்களவைத் தலைவர்:  எல்லாமே முக்கியம்தான். …. (குறுக்கீடு) …நீங்களும் ஒரு முக்கியமான மனிதர்தான். (….குறுக்கீடு) … இந்த அவையும்  முக்கியமான ஒன்றுதான். நேரம் மிகவும் முக்கியம்.

டி.கே.ரெங்கராஜன்: சிறுபான்மையினருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன். இதில் மாநில அரசுகளுக்குத்தான் முக்கியமான பங்கு இருக்கிறது. எனவே மாநில அரசுகளை மீறாதீர்கள். இதுவே என்னுடைய வேண்டுகோள்.”

இவ்வாறு டி.கே.ரெங்கராஜன் பேசினார்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.