பனாஜி;
இந்தியாவின் பிரதமராக ஜின்னா பதவியேற்றிருந்தால், இரண்டு நாடுகள் உருவாகி இருக்காது என்று தலாய் லாமா தெரிவித்துள்ளார். மேலும், ஜின்னா பிரதமராவதற்கு நேருதான் தடையாக இருந்தார் என்றும் திரியைக் கொளுத்திப் போட்டுள்ளார்.மக்கள் சீனக் குடியரசுக்கு எதிராக சீர்குலைவு வேலைகளில் ஈடுபட்டு வருபவர் தலாய் லாமா. திபெத்திய புத்தமதத் தலைவரான இவர், புதன்கிழமையன்று வடக்கு கோவாவில் உள்ள கோவா மேலாண்மை கல்வி நிறுவன மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது, “ராணுவ முறையை விட ஜனநாயக முறை சிறந்தது; ஏனெனில் ஜனநாயகம்தான் முடிவெடுக்கும் அதிகாரத்தை மக்களின் கைகளில் அளிக்கிறது” என்று குறிப்பிட்ட அதேநேரத்தில், “பிரதமர் பதவியை முகமது அலி ஜின்னாவுக்கு வழங்கவே மகாத்மா காந்தி விரும்பினார்; ஆனால், நேரு இதற்கு மறுத்துவிட்டார்; தான்தான் பிரதமர் ஆக வேண்டும் என்று அவர் பிடிவாதமாக இருந்தார்” என்று சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார்.

“மகாத்மா காந்தியின் திட்டம் மட்டும் நிறைவேறியிருந்தால், ஜின்னா பிரதமராகி இருப்பார்; இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாகவே இருந்திருக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மக்கள் தங்களிடையே இருக்கும் வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் உபதேசம் வழங்கியுள்ளார்.அமெரிக்காவின் ஏஜெண்டாக இருந்து, சீனாவுக்கு எதிராக குழப்பம் விளைவித்து வந்த தலாய் லாமா, கோவா மாணவர்களுடனான உரையாடல் மூலம், தற்போது இந்தியாவிலும் குழப்பம் ஏற்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளார்.ஏற்கெனவே, இந்திய – சீன உறவை சீர்குலைத்ததிலும் தலாய் லாமா-வுக்கு முக்கியப் பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.