புதுதில்லி, ஆக.8 –

வரலாறு படைத்திடவிருக்கும் செப்டம்பர் 5 – தொழிலாளர்கள் விவசாயிகள் பேரணியை சிறப்பாக நடத்தி முடிப்பதற்காக மார்க்சியப் பொருளாதார அறிஞர் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் தலைமையில் வரவேற்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

புதுதில்லியில் உள்ள சிஐடியு அலுவலகமான பிடிஆர் பவனில் ஜூலை 31ஆம் தேதி இதற்காக நடைபெற்றக் கூட்டத்தில்   பேராசிரியர் உத்சா பட்நாயக், பேராசிரியர் ஜெயதி கோஷ், பேராசிரியர் சி.பி. சந்திரசேகர், என்.கே. ஷர்மா, கஜல் கோஷ். பேராசிரியர் அர்ச்சனா பிரசாத், விவன் சுந்தரம், எம்.கே. ரைனா, ராஜேந்திர பிரசாத், பேராசிரியர் சுராஜித் மஜூம்தார், பிரபிர் புர்கயஸ்தா, சுபோத் வர்மா, கே,எம்.திவாரி, டி.ரகுனந்தன், டாக்டர் அமிட் சென்குப்தா, வழக்குரைஞர் சோம்தத் ஷர்மா, சுதான்வா தேஷ்பாண்டே, மலையஸ்ரீ ஹஸ்மி, விஜய் பிரசாத்,  புஷ்பேந்திரா கிரேவால், மைமூனா முல்லா, ஆஷா ஷர்மா, சுபாஷ் லம்பா, ஏ.கே.பட்நகர் உட்பட பலர் துணைத்தலைவர்களாகக் கொண்டு 300 பேர் கொண்ட வரவேற்புக்குழு  அமைக்கப்பட்டது.  மேலே குறிப்பிட்டதுபோல பிரபாத் பட்நாயக் வரவேற்புக்குழுத் தலைவராக தேர்வுசெய்யப்பட்டார்.

சிஐடியுவின் பொருளாளர் எம்.எல். மல்கோடியா, வரவேற்புக்குழுவின் கன்வீனராகவும், பி.கிருஷ்ணபிரசாத், ஏ.ஆர்.சிந்து, அனுராக் சாக்சனா இணை கன்வீனர்களாகவும் தேர்வுசெய்யப்பட்டனர். முகாம்கள், ரயில்வே நிலையங்கள், மேடை, பேரணிப் பாதை, அலங்காரம், மருத்துவம், போக்குவரத்து, துப்புரவுப் பணிகள், தொண்டர்கள் அணி என பல்வேறு துணைக்குழுக்களும் அமைக்கப்பட்டன.

இப்பேரணியை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்காக பல்வேறு வடிவங்களிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. நாடகங்கள், பாடல்கள், குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு மக்கள் மத்தியில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது. சுவரொட்டிகள், தோரணங்கள் முதலானவையும் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சுவர் விளம்பரங்களுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

தில்லி மாநகரை நோக்கி நாடு முழுவதுமிருந்து ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் வர இருக்கிறார்கள். இதில் கேரளாவிலிருந்து 20 ஆயிரம் பேரும், மேற்கு வங்கத்திலிருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும் அடங்குவர். வங்கி, இன்சூரன்ஸ், மத்திய மாநில அரசு ஊழியர் சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்களும் பெருமளவில் பங்கேற்கின்றனர். அவர்கள் தங்குவதரற்காக தில்லியிலுகூம், காசியாபாத்திலும் இரு முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவையன்னியில் ஏராளமானவர்கள் பல்வேறு ஓட்டல்களிலும் தர்மசாலைகளிலும் அறைகள் பதிவு செய்திருக்கின்றனர். பேரணியை வண்ணமானதாகவும், கவர்ச்சிகரமானதாகவும் உருவாக்கிடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

இப்பேரணி/ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு,  அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம், வங்கி, இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஆகியவற்றின் தலைவர்களும் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.