சென்னை,
திருப்பூர் மாவட்டம் திருமலைக் கவுண்டன்பாளையம் அரசுப் பள்ளி சத்துணவு சமையலர் பாப்பாள் அவர்களை பணி செய்யவிடாமல், தொடர்ந்து தீண்டாமைக் கொடுமைகள் துரத்தி வருகின்றன. இப்பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத், பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் திருமலைக் கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு சமையலராக பணிசெய்து வருபவர் திருமதி பாப்பாள். தலித் – அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் அவர்களை பணி செய்யவிடாமல், தொடர்ந்து தீண்டாமை கொடுமைகள் துரத்தி வருகிறது. பாப்பாள் திருமலைக் கவுண்டன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 12 வருட காலமாக அவர் 20 கி.மீ. தொலைவில் உள்ள ஒச்சாம்பாளையம் கிராமத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், திருமலைக் கவுண்டன்பாளையம் சத்துணவு சமையலர் ஓய்வு பெற்றதால், அவ்விடத்திற்கு பாப்பாள் ஜூலை 16 அன்று மாறுதல் பெற்று வந்தார். அவர் மாறுதல் பெற்று வந்த தினத்திலேயே பள்ளிக்கு பூட்டு போட்டு, குழந்தைகளை பள்ளிக்கு வெளியில் அமரவைத்து, அவர் சமைத்தால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கமாட்டார்கள் என ஆசிரியர்களே போராட்டத்தை முன்னின்று நடத்தினார்கள். அதன் பேரில் அங்கு வந்த ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், பாப்பாளை மீண்டும் பணிமாறுதல் செய்து விட்டார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தலித் இயக்கங்கள் உடனடியாக போராட்டத்தில் இறங்கியதால், பணி மாறுதல் ரத்து செய்யப்பட்டது. இதனால், ஆத்திரமுற்ற அக்கிராமத்தின் சாதியவாதிகள் தொடர்ந்து தீண்டாமை கொடுமை செய்து வருகிறார்கள்.

அன்று முதல் தலித் குழந்தைகள் மட்டுமே உணவு அருந்திவரும் நிலையில், 7.8.2018 அன்று பவித்ரா என்கிற தலித் அல்லாத சமூகத்தைச் சார்ந்த குழந்தை மதிய உணவு வாங்கியுள்ளார். உடனே அங்கு வந்த தலைமை ஆசிரியர் சசிகலா, பவித்ராவின் சாப்பாட்டு தட்டில் பல்லி கிடக்கிறது என்றவாறே தனது செல்போனில் படம் எடுத்துக் கொள்கிறார். உடனடியாக காவல்துறையில் புகார் கொடுத்து பாப்பாள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. தற்போது அவரை கைது செய்திட வேண்டும் என நிர்ப்பந்தம் செய்து வருகிறார்கள். அப்பட்டமான இந்த சாதிக்கொடுமையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. சாதிய வன்மத்தோடு பொய்ப்புகார் அளித்த தலைமை ஆசிரியர் சசிகலா மீது வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திட வேண்டும். மேலும் இப்பிரச்சனையில் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளாமல் சாதியாளர்களுக்கு துணைபோகும் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. எனவே தமிழக அரசு தலையிட்டு சமூக நீதியை நிலைநாட்டிட வேண்டும். மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தேவையான உளவியல் ஆலோசனை வழங்கிட வேண்டும். பிரச்சனையின் தீவிரத்தை கணக்கில் கொண்டு கடுமையான சட்ட நடவடிக்கைகளோடு, சமூக நல்லிணக்கக் கூட்டங்களையும் நடத்திட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.