திருவனந்தபுரம்;
கேரள அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் வெளியான நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு சொந்தமாக கார் கூட இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கேரள அமைச்சர்கள் தங்களின் சொத்து விவரங்கள் குறித்த தகவல்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆளுநரிடம் சமர்ப்பிக்கும் நடைமுறை இருந்து வந்தது.

இந்நிலையில், முதல்வர் உட்பட அமைச்சர்களின் சொத்து விவரங்களை, மக்கள் அனைவருமே பார்த்துக் கொள்ளும் வகையில், இணையதளத்தில் வெளியிடுவதென்ற முக்கியமான முடிவை, கடந்த ஜூலை மாத இறுதியில், பினராயி விஜயன் தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு எடுத்தது.

இதற்கான ஆலோசனையை கேரள அமைச்சரவை கூட்டத்தில், பினராயி விஜயன் முன்வைத்தபோது, அதற்கு அமைச்சரவை முழு ஒப்புதல் அளித்தது. இதன்படி, 2018-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி வரையிலான முதல்வர் உட்பட அமைச்சர்களின் சொத்து விவரங்கள் விரைவில் அரசு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.                                                     தாமஸ் ஜசக்                                                                                                      அதன்படியே தற்போது கேரள அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் வெளியாகி உள்ளது.
அதில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு சொந்தக் கார் இல்லை என்றும், நிதியமைச்சர் தாமஸ் ஜசக்கிடம் காணி நிலம் கூட இல்லை என்றும் தெரியவந்துள்ளது.முதல்வர் பினராயி விஜயனின் மாத வருமானம் ரூ. 79 ஆயிரது 364. தவிர ரூ 2. 20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் வைத்துள்ளார். ரூ. 22.7 லட்சத்துக்கு முதலீடுகள் வைத்துள்ளார். 95.5 சென்ட் நிலம் உள்ளது. எனினும் முதல்வரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பும் ரூ. 50 லட்சத்துக்குள்தான் இருக்கிறது.

அதேபோல் நிதியமைச்சர் தாமஸ் ஐசக்கிற்க்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை. மேலும் தங்கமும் இல்லை. மாதம் ரூ. 55 ஆயிரத்து 012 வருவாய் பெறுகிறார். ரூ 1.40 லட்சத்துக்கு முதலீடு செய்துள்ளார்.

கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி  சுரேந்திரன் , சம்பளத்தை கட்சிக்கு அளித்தது போக, தன் மாத வருமானமே ஆயிரம் ரூபாய்தான் என்று குறிப்பிட்டுள்ளார். இவர் தன் வேலைக்கு சொந்த பணத்தில் ஆட்டோவில் செல்கிறார். கட்சி அலுவலகத்தில்தான் தங்கிக்கொள்கிறார். ரூ . 99 ஆயிரம் மதிப்புக்கு தங்க நகை வைத்துள்ளார். மேலும் ரூ 63 ஆயிரம் வரை முதலீடு செய்துள்ளார். 83 சென்ட் நிலம் சொந்தமாக உள்ளது.கேரள அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ள இந்த விவரங்கள் பலவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.                                                               கடகம்பள்ளி  சுரேந்திரன்                                                                       கேரளத்தில் முதல்வர் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைச்சர்கள் ரூ. 50 ஆயிரம் வரை ஊதியம் பெற்றாலும், அந்த ஊதியத்தையும் கட்சிக்கு அளித்து விட்டு, முழுநேர ஊழியர்களுக்கென கட்சி அளிக்கும் சிறு ஊதியத்தை மட்டுமே பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.