கோவை,
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் கோவை குற்றாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை மீண்டும் தடை விதித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, வால்பாறை சின்கோனா பகுதியில் அதிகபட்சமாக 135 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் வால்பாறையில் உள்ள சோலையாறு அணைக்கு தற்போது வினாடிக்கு 6,300 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 6,100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பலத்தமழை பெய்து வருகிறது. நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்வதை தொடர்ந்து கோவை குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வியாழனன்று சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

முன்னதாக, கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கோவை குற்றாலம் அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த 39 நாட்களாக இந்த தடை நீடித்தது. இதன்பின் மழை குறைந்து கடந்த 2 நாட்களாக கோவை குற்றாலம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மழையளவு விவரம்:
கோவை மாவட்டத்தில் புதனன்று பெய்த மழையளவு விவரம் வருமாறு, பீளமேடு 4 மி.மீ, பொள்ளாச்சியில் 75 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் 10 மி.மீ, சூலூர் 5.20 மி.மீ, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 12 மி.மீ, வால்பாறை சின்கோனா 135 மி.மீ , சின்னக்கல்லார் 116 மி.மீ, வால்பாறை பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் 73 மி.மீ, வால்பாறை தாலுகா அலுவலகம் 89 மி.மீ, கோவை தெற்கு 12 மி.மீ, மழை பதிவாகியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.