ஈரோடு,
ஈரோட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், சோலார் பகுதியில் இரணியன் வீதியில் வசித்து வருபவர் சாந்தா (30). இவரிடம் கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி தெருவை சேர்ந்த செந்தில்குமார் (57) என்பவர் அணுகி அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ.3 லட்சம் பெற்றுக் கொண்டுள்ளார். ஆனால், நீண்ட நாட்களாக வேலை வாங்கி தராததால் தனது பணத்தை திருப்பி தரும்படி சாந்தா, செந்தில்குமாரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் பணத்தை திருப்பி தரமறுத்ததுடன், சாந்தாவிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் சாந்தா புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் செந்தில்குமாரை கைது செய்து விசாரித்தனர். இதில், கடந்த 2012-13 ஆம் ஆண்டுகளில் கரூர், நல்லூர் ஆகிய பகுதிகளில் இதேபோன்று 80க்கும் மேற்பட்டோரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்திருந்தது தெரியவந்தது. மேலும், இவர் மீது ஏற்கனவே வந்த புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை மீண்டும் கைது செய்த காவல்துறையினர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவரால் ஏமாற்றப்பட்ட குறித்த நபர்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.