சென்னை,
அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்கள் மறு மதிப்பீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் அம்பலமானது. தேர்வில் தோல்வி அடைந்த மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களிடம் பல ஆயிரம் ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு கூடுதல் மதிப்பெண் வழங்கியிருப்பது அண்ணா பல்கலைக் கழகம் மீதான நம்பகத் தன்மையை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது. லஞ்ச ஒழிப்பு காவல்துறை நடத்திய ரகசிய விசாரணையில், விடைத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல் நடந்திருப்பதும், சில நூறு கோடி ரூபாய் லஞ்சமாக கை மாறி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஊழல் தடுப்புத் துறை மற்றும் கண்காணிப்புத் துறையின் சென்னை சிறப்புப் பிரிவினர் அதிரடியாக செயல்பட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை விரிவடையும் பட்சத்தில் பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியர்கள், இடைத்தரகர்கள் சிக்குவார்கள் என தகவல் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு வியாழனன்று (ஆக. 9) விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த வழக்கில் மேற்கொண்ட நடவடிக்கைகளை எடுத்துக் கூறினார். மேலும், லஞ்ச ஒழிப்பு காவல் துறை வழக்குப்பதிவு செய்த குறுகிய காலத்திற்குள் சிபிஐக்கு மாற்றக் கோருவது நியாயமற்றது என்றும் வாதிட்டார். அவரது வாதத்தை ஏற்ற நீதிமன்றம், சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.