சென்னை,
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு சிஐடியு அனைத்து பிரிவு சங்கங்களும் மூன்று தினங்களுக்கு செங்கொடி தாழ்த்திட வேண்டுமென சிஐடியு மாநிலக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு தலைவர் அ.சவுந்தரராசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர், முன்னாள் முதல்வர் அவர்களின் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் மாநில உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதிலும் தமிழகத்தில் நலிந்த பிரிவினர் மற்றும் சமூக ரீதியாய் ஒடுக்கப்பட்டோர் மற்றும் பிற்பட்டோருக்காகவும் ஆற்றிய தொண்டு தனித்துவமானது. தமிழ் மக்களுடைய உரிமைகளையும் மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்தும் முற்போக்கு கருத்துக்களுக்காகவும் தனது நாவன்மையையும் கைவன்மையையும் அயராது பயன்படுத்தியவர். அவரது திரைப்பணியிலும் இந்த பிரச்சனைகளே எதிரொலித்தன. தமிழ்நாட்டின் பொது போக்குவரத்து நாட்டுடைமை ஆக்கப்பட்டதில் அவருடைய பங்கு போற்றத்தக்கது. மாணவர்களுக்கு இலவச பஸ் பயணம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ஆகிய குறிப்பிடத்தகுந்த முன்னோடி திட்டங்கள், முறைசாரா தொழிலாளர்களுக்கான வாரியங்களை கேரள அரசின் அடியொட்டி உருவாக்கியது பாராட்டுதலுக்குரியது.

மேதினத்திற்கு சிறப்புகள் செய்ததும், தொழிற்சாலைகளில் பயிற்சியாளர் எண்ணிக்கையை வரையறுத்து சட்டம் இயற்றியதும் குறிப்பிடத்தக்கது. அவசர நிலையை உறுதியாக எதிர்த்து நின்று ஆட்சியை இழந்தது வரலாற்று சிறப்புக்குரியது. மத மூடத்தனங்கள். மத துவேசங்கள், மத மோதல்கள் ஆகியவற்றை உறுதியாக எதிர்த்து சமூக அமைதிக்கு நின்றவர். சாதி ஏற்றத்தாழ்வுகளை, மோதல்களை உறுதியாக எதிர்த்து நின்றவர். அவரது இழப்பு தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பேரிழப்பு. சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு தனது அஞ்சலியை தெரிவிக்கிறது. சிஐடியு அனைத்து பிரிவு சங்கங்களும் மூன்று தினங்களுக்கு செங்கொடி தாழ்த்திட வேண்டுமென சிஐடியு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது. அவரை இழந்து வாடும் கட்சி தொண்டர்களுக்கும். அவரது குடும்பத்தாருக்கும் தொமுச அமைப்பினருக்கும் ஆழ்ந்த இரங்கலை சிஐடியு மாநிலக்குழு தெரிவித்துக்கொள்கிறது.

ஆகஸ்ட் 9ஆம் தேதி சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடக்கவிருந்த சிறை நிரப்பும் போராட்டம் திமுக தலைவர் மறைவையொட்டி ஒத்திவைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.