தூத்துக்குடி,
வழிப்பறியில் ஈடுபட்டதாக பொய் வழக்கில் கைது செய்யப்பட்டகல்லூரிமாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காவல்துறை நடவடிக்கையை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி முனியசாமி புரத்தைச் சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகன் வேல்முருகன் (21). இவர் தூத்துக்குடி வஉசி கல்லூரியில் பி.காம்மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இவர் மீது வழிப்பறிவழக்கு பதிவு செய்து தென்பாகம் காவல்நிலையத்தில் கடந்த 12.7.18 அன்று வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி வழங்கிய நிபந்தனை ஜாமீனில் ஒரே நேரத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் கையொப்பம் இடவேண்டும் என உத்தரவிட்டது. இதன் காரணமாக மாணவர் வேல்முருகன் கடும் மன உளைச்சலுக்குஆளானார். அவர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத வேளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவர் மீது பொய் வழக்குபோட்டு அவரது மரணத்திற்கு காரணமான காவல்துறையைக் கண்டித்து வஉசி கல்லூரி வாயில் முன்பாக இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர் தற்கொலை செய்ய காரணமாக இருந்த அதிகாரிகள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவர் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்.

அவரது வீட்டில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தினர். இதற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாநகரத் தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சுரேஷ், மாவட்டத் தலைவர் ஜாய்சன் ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினர்.இதில் ஒன்றியச் செயலாளர் மாரிச்செல்வம், தலைவர் விஜய், வஉசி கல்லூரி மாணவர் சங்கபொறுப்பாளர்கள் அபினேஷ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்கு விடுமுறை அளித்தது. பின்னர் அங்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.