புதுச்சேரி,
கலைஞர் மறைவையடுத்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் சட்டசபையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், ஷாஜகான், தலைமை செயலர் அஸ்வனி குமார் மற்றும் அரசுத்துறை செயலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மறைந்த கலைஞருக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

புதுச்சேரி சட்டமன்றதில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்திளாளர்களிடம் கூறியதாவது:- கலைஞரின் மறைவை முன்னிட்டு புதுச்சேரியில் ஒருநாள் அரசு விடுமுறை, 3 நாள் துக்கம் அனுசரிப்பும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அமைச்சரவை கூட்டத்தில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் மேற்கொள்ளப்படும். அரசு நிகழ்ச்சிகள் ஏதும் நடத்தப்படாது.  டாக்டர் கலைஞர் தமிழ் மக்களுக்காகவும், தமிழ் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டவர். அவரைப்போற்றி, மதிக்கும் வகையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் டாக்டர் கலைஞர் பெயரில் இருக்கை (அமர்வு) உருவாக்கப்படும். இந்த இருக்கை தமிழ் வளர்ச்சிக்கு பயன்படும் வகையில் இருக்கும். காரைக்காலில் புதியதாக ஆரம்பிக்கப்பட உள்ளபட்ட மேற்படிப்பு மையத்திற்கு கலைஞர் பெயர் சூட்டப்படும். காரைக்காலில் கோட்டுச்சேரியில் இருந்து திருநள்ளாறு வரை செல்லும் புற வழிச்சாலைக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும். புதுச்சேரியில் ஒரு தெருவிற்கு கலைஞர் பெயர் வைக்கப்படும். அரசு சார்பில் முழு வெண்கலச் சிலை அமைக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக குழு அமைத்து, இடம் தேர்வு செய்து சிலை அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.