சென்னை,
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பல்வேறு அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

விவசாயிகள் சங்கம்:
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண் முகம் வெளியிட்ட அறிக்கை: விவசாயத்திற்கு இலவச மின்சாரம், விவசாய தொழிலாளர்களுக்கு நலவாரியம், விவசாயிகளின் கடன் தள்ளுபடி, அரசு தரிசு நிலத்தை நிலமற்றவர்களுக்கு வழங்கும் திட்டம் பழங்குடியினருக்கு ஒரு சதவீத இடஒதுக்கீடு, தனி இயக்குநர், சமத்துவபுரம் உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை தன்னுடைய ஆட்சிக் காலத்தில் நடைமுறையாக்கிக் காட்டியவர் கலைஞர் கருணாநிதி. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், பல லட்சக்கணக்கான தி.மு.க தொண்டர்களுக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி:
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக் குழுவின் சார்பில் மாநிலத் தலைவர் பி.சம்பத், பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலாளர் மறைந்த தலைவர் என்.வரதராஜன் தலைமையில் 2006 முதல் 2009 வரை தலித் அருந்ததியர் சமூக மக்களுக்கு உள் ஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டங்களை ஏற்று தலித் அருந்த
தியர் சமூக மக்களுக்கு 3 விழுக்காடு உள்ஒதுக்கீட்டை சட்டமாக்கியவர். இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து நேர்கிற போதெல்லாம் அதனை பாதுகாத்திட குரல் எழுப்பியவர். சமீப காலத்தில் மதவெறிக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பெரிதும் ஆதரவு வழங்கியவர்.

வாலிபர் சங்கம்:
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் மாநிலத் தலைவர் எம்.செந்தில் மற்றும் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: இளைஞர்களுக்கான வேலையில்லா கால நிவாரணத்திற்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர்ந்து போராடி வந்தது. 2006 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப் பேற்ற திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியை நேரடியாக சந்தித்து கோரிக்கையை முன்வைத்தது. இளைஞர்களின் கோரிக்கையான வேலையில்லா கால நிவாரணத்தை மீண்டும் அறிவித்தார்.

சிறுபான்மை மக்கள் நலக்குழு:
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகம்மது, பொதுச்செயலாளர் ப.மாரிமுத்து ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: எண்பதாண்டு அரசியல் வாழ் வில் ஐந்துமுறை தமிழக முதல்வராகப் பணியாற்றியவர்; மிகச்சிறந்த நிர்வாகத் திறன் படைத்தவர்; எழுத்தாளர், பேச்சாளர், இலக்கியவாதி, களப் போராளி என்று பன்முக ஆளுமைத் திறன் பெற்றவர். அவருடைய மரணம்
தமிழக அரசியலுக்கு மட்டுல்ல, இந்திய
அரசியலுக்கே பேரிழப்பாகும்.

அறிவியல் இயக்கம்:
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேரா. எஸ்.மோகனா, பொதுச் செயலாளர் அமலராஜன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: பெண்ணுரிமை பேணவும் கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்டவும் மாநில உரிமைகள் பேணவும் மேலும் அவர் தேவைப்படுகிறார். அவர் தலைமைப் பொறுப்பில் இருந்து வழி நடத்திய கட்சி இந்த செரிவான கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும். அறிவியல் மனப்பாங்கை காத்து தேசத்தை காக்க வேண்டும்.

ஆசிரியர் கூட்டணி:
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் ச.மயில் வெளியிட்ட அறிக்கை: தமிழ் நாட்டு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாநில அரசின் 5வது ஊதியக்குழுவின் மூலமாக 01.06.1988 முதல் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்கி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் கலைஞர். தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு 2006-ல் ஆட்சிக்கு வந்தவுடன் காலமுறை ஊதியம் வழங்கி ஆணை பிறப்பித்தவர். தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பக முன்னுரிமையின் படி ஆசிரியர் பணி நியமனங்கள் வழங்கி ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஆசிரியர்களாக நியமனம் பெற வழியேற்படுத்தியவர்.

ஓய்வூதியர் சங்கம்:
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன், பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: 1988ல் ஆளுநர் ஆட்சியில் மத்திய அரசுக்கு இணையான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கோரி 31 நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. பிறகு ஆட்சி அமைத்த கலைஞர் உடனடியாக அமல்படுத்தினார். அரசு ஊழியர்களுக்கு அடிமை சங்கிலியாக இருந்த ரகசிய குறிப்பேட்டு முறையை உடைத்தெறிந்தார். அரசு ஊழியர் இறந்தால் அன்றைய நிலையில் ரூ. 10 ஆயிரம் குடும்ப பாதுகாப்பு நிதியாகவும். குடும்ப உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க ஆணை பிறப்பித்து இறந்த அரசு ஊழியர் குடும்பத்தை பாதுகாத்தார்.

கேரள சமாஜம்:
சென்னை கேரள சமாஜம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அதன் செயலாளர் கும்பளங்காடு உன்னிகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் நா.பெரியசாமி, தமிழ்நாடு யூனியன் ஆப்ஜர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் உள்ளிட்டோரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

 

மக்கள் ஒற்றுமை சக்திகளுக்கு மாபெரும் இழப்பு

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன், க. உதயகுமார் விடுத்துள்ள இரங்கல் செய்தி:வடமாநிலங்கள் பலவும் மதக்கலவர பூமியாகத் திகழும் நிலையில் தமிழகம் சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது என்றால் அதற்கு அவரின் இந்தப் பங்களிப்பு ஒரு வலுவான காரணியாகும். மனுவாதிகளின் முஸ்லீம் – கிறிஸ்தவர் மீதான வன்மத்தையும், மதக்கலவரங்களைத் தூண்ட அவர்கள் செய்த சதிவேலைகளையும் அவர் விடாது எதிர்த்து நின்றார். வகுப்புவாத சக்திகள் வேறு எந்த மதத்திலிருந்து கிளம்பினாலும் கண்டித்தார். அதேநேரத்தில், சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வஞ்சிக்கப் பட்டிருந்த முஸ்லீம்களுக்கு நீதி வழங்கவும் அவர் தவறவில்லை. அவர்களுக் கென பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக் கீட்டில் 3.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு கொடுத்தார். அதை தமிழ்ச் சமுதாயம் உற்சாகமாக ஏற்றதில் இங்கு நிலவிய அருமையான மதநல்லிணக்கம் உறுதியானது.

சேது சமுத்திர திட்டத்தை ஆர்எஸ்எஸ் -பாஜக பரிவாரம் மதவெறி நோக்கில் எதிர்த்த போது அதைக் கண்டித்து முழங்கியவர் கலைஞர். தென்னிந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திருக்கக் கூடிய ஒரு திட்டத்தை வகுப்புவாதிகள் முடக்கியிருக்கலாம்; ஆனால் அதற்காக கலைஞர் நடத்திய சித்தாந்த போராட்டம் வரலாற்றில் இடம் பெறும்.

Leave A Reply

%d bloggers like this: