திருப்பூர்,
பன்முகத் தன்மை கொண்ட தலைவர் டாக்டர் கலைஞர் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் புகழாரம் சூட்டியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.ஆண்டாள், மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.முருகேசன் ஆகியோர் புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், முத்தமிழ் அறிஞருமான டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவுச் செய்தி எங்களது சங்கத்தைச் சார்ந்த ஊழியர்களை மீளாத்துயரில் ஆழ்த்தி உள்ளது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அக்கட்சியைச் சார்ந்தவர்களுக்கும் எங்களது சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தில் தமிழ் மொழிக்குக் குரல் கொடுத்தவர், இந்தி திணிப்பை எதிர்த்து களம் கண்டவர் முத்தமிழ் அறிஞர், மூடநம்பிக்கைக்கு எதிராக குரல் எழுப்பியவர், பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு என்று சட்டம் இயற்றியவர், ஏழைக் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்ய இடை நிற்றலை தவிர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கியவர் டாக்டர் கலைஞர். சமத்துவபுரம் என்ற சாதி சமயமற்ற நிலையை உருவாக்க வித்திட்டு தமிழகம் முழுவதும் சமத்துவம் மலர சமத்துவபுரம் உருவாக்கியவர் டாக்டர் கலைஞர்.

உழைப்பவர்களின் உன்னத நாளான மே தினத்தை கொண்டாடசென்னையில் “மே தினப் பூங்கா” அமைத்து அனைத்து தொழிலாளர்களின் தோழனாகத் திகழ்ந்தவர் கலைஞர். பார் போற்றும் சத்துணவுத் திட்டத்தில் ஏழைக் குழந்தைகளின் உடல்நலம் காக்க தினந்தோறும் முட்டை வழங்கியவர் கலைஞர். உழைப்பாளி,தொழிலாளி, ஆசிரியர், அரசு ஊழியர் ஆகியோரின் நலன் காத்தவர், போராடக்கூடிய தலைவர்களை கௌரவம் பார்ப்காமல் பேச்சுவார்த்தை மூலம் கோரிக்கைகளை தீர்வு காணவழிவகுத்தவர் கலைஞர். இயல், இசை நாடகம், கல்வி இப்படி பன்முகதன்மை கொண்ட தலைவராக விளங்கியவர்கலைஞர். அது மட்டுமல்லாமல் சத்துணவு ஊழியர்கள் ஓய்வுபெறும் பொழுது ஓய்வூதியம் இல்லாமல் வெளியில் செல்லும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து தொலை நோக்கு பார்வையோடு, சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும்பொழுது ஓய்வூதியத் திட்டத்தை துவக்கி வைத்த பெருமை டாக்டர் கலைஞரை சாரும். இப்படி புகழ்பெற்ற தலைவருக்கு எங்களது சங்கத்தின் சார்பாக புகழஞ்சலி செலுத்துகிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.