புதுதில்லி, ஆக.8-

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அஞ்சலித் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் – அதாவது மக்களவையிலோ அல்லது மாநிலங்களவையிலோ –  முன்னெப்போதும் உறுப்பினராக இல்லாத ஒருவருக்காக இவ்வாறு இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

இதற்கான முடிவு, மாநிலங்களவைத் தலைவர் எம்.வெங்கய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் ஆனந்த் குமார் மற்றும் அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்றக்குழுத் தலைவர்கள் அடங்கிய கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. கலைஞர் மு. கருணாநிதி நாட்டின் மிக உயர்ந்த தலைவர்களில் ஒருவர் என்பதால், அவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை ஒருநாளைக்கு ஒத்திவைக்கவேண்டும் என்றும், இதுதொடர்பாக இதுநாள்வரை இருந்துவரும் நடைமுறையைப்பற்றிக் கண்டுகொள்ளக்கூடாது என்றும், அனைத்துக்கட்சித் தலைவர்களும் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்தே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. மேலும் இரு அவைத்தலைவர்களும் கலைஞர் மு. கருணாநிதி குறித்து மிகவும் சிறப்பான முறையில் இரங்கல் செய்தியை வாசித்தார்கள். அதன்பின்னரே, உறுப்பினர்களின் மவுன அஞ்சலிக்குப்பிறகு அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.