சென்னை,
தொழிலாளர்களை தரக்குறைவாக பேசிய அதிகாரி ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெரம்பூரில் டிஆர்இயூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை காலில் போட்டு மிதிக்கும் லோகோ ஒர்க்ஸ் நிர்வாகத்தைக் கண்டித்து டிஆர்இயூ சார்பில் தலைமை பணிமனை மேலாளர் அலுவலகம் முன் டிவிஷன் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் செவ்வாயன்று (ஆக. 7) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், டிஆர்இயு செயல் தலைவர் ஏ.ஜானகிராமன், டிவிஷன் துணைச் செயலாளர் பால்ஜோனி ஆகியோர் பேசினர். இதுகுறித்து ஜானகிராமன் கூறியதாவது:சமீபத்தில் நந்தகுமார் என்ற தொழிலாளி தாய் இறந்து சில நாட்களில் விடுமுறை கேட்டதற்கு “சுடுகாட்டில் வெட்டியான் வேலை செய்பவனுக்கு ரயில்வே வேலை கொடுத்தால் இப்படித்தான்” என்று கீழ்த்தரமாகவும் சாதி ரீதியாகவும் அதிகாரி ராமச்சந்திரன் பேசியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்து 2 மாதங்களாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல் சந்தோஷ் என்ற தலித் தொழிலாளி தேர்வு எழுத விடுமுறை கேட்ட போதும் அதிகாரி ராமச்சந்திரன் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதுகுறித்த புகாரின் பேரில் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காமல் புகார் அளித்த சந்தோசை இடமாற்றம் செய்துள்ளது நிர்வாகம். அதிகாரி ராமச்சந்திரனின் பாரபட்ச போக்கை சுட்டிக் காட்டிய சத்யா என்ற தொழிலாளியை இரும்பு ராடு எடுத்து தாக்க அதிகாரி ராமச்சந்திரன் முயற்சித்தார். கரோஷன் செக்ஷனில் வேலை செய்யும் ஆண், பெண் தொழிலாளர்களையும், மேற்பார்வையாளர்களையும் தகாத வார்த்தைகளால் பேசும் அதிகாரி ராமச்சந்திரன் மீது சிவில் உரிமைகள் பாதுகாப்பு (பிசிஆர் ஆக்ட்) சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தொழிலாளர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என எச்சரித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.