===மதுக்கூர் ராமலிங்கம்===
தீக்கதிர் நாளேட்டின் பொன்விழா 2013 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அதையொட்டி மலர் ஒன்றையும் வெளியிட்டோம். வாழ்த்துச் செய்தி கேட்டு பல தலைவர்களுக்கும் கடிதம் எழுதியிருந்தோம். முதலில் வந்தது திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் வாழ்த்துச் செய்திதான். அவரின் அழகான கையெழுத்துடன் அனுப்பப்பட்டிருந்த வாழ்த்துச் செய்தியில், “நான் அன்றாடம் படிக்கின்ற நாளேடுகளில் தீக்கதிர் இதழும் ஒன்றாகும். என்னை பாராட்டி அந்த இதழ் எழுதிய போதும் படித்திருக்கிறேன். என்னை தாக்கி எழுதுகின்ற நேரத்திலும் படித்திருக்கின்றேன். தாக்கிய நேரத்திலும், பாராட்டிய நேரத்திலும் ஓர் அளவோடு எழுதுவதை நான் கண்டிருக்கின்றேன். மேலும் அந்த இதழில் வெளி வருகின்ற சிறப்புக் கட்டுரைகள் நல்ல பல கருத்துக்களை தாங்கி வெளிவருவதை படித்திருக்கிறேன்” என்று கூறி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

வாழ்த்து மடல் வந்து சேர்ந்ததா என்பதையும் தொலைபேசியில் அழைத்து உறுதி செய்து கொண்டார். பல நேரங்களில் தீக்கதிருக்கு கட்டுரைகள் கேட்ட போதும், தட்டாமல் எழுதி தந்திருக்கின்றார்.

ஒருமுறை மதுரையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஐஏஎஸ் அதிகாரி வெ.இறையன்புவை சந்தித்த போது, திமுக ஆட்சியில் நான் செய்தித் துறை இயக்குநராக இருந்தேன். உயர் அதிகாரிகள் அனைவரும் முதலில் படிக்க நினைப்பது தீக்கதிர் ஏடுதான். ஏனென்றால் உங்கள் ஏட்டில் வருகிற செய்திகளை எங்களுக்கு முன்பே கலைஞர் படித்து விடுவார். ஏதாவது அரசை விமர்சித்திருந்தால் தீக்கதிர் பார்த்தீர்களா என்று தொலைபேசியில் கேட்பார்.

இல்லையென்றால் படித்து விட்டு என் லைனில் வாருங்கள் என்று வைத்து விடுவார். அவர் எந்த செய்தியை கூறுகிறார் என்று தெரியாமல் மொத்த பத்திரிகையையும் படித்துவிட்டு அவரிடம் அதிகாரிகள் பேசுவார்கள். தீக்கதிர் கலைஞருக்கு பிடித்த பத்திரிகையாகவும், உயர் அதிகாரிகளுக்கு எரிச்சலூட்டும் பத்திரிகையாகவும் இருந்தது என்றார்.

தீக்கதிர் எண்ம பதிப்பின் பொறுப்பாசிரியரும், அன்றைய விருதுநகர் மாவட்ட நிருபருமான எம்.கண்ணன், தீக்கதிர் மதுரை மாவட்ட முன்னாள் நிருபர் ப.கவிதா குமார், தீக்கதிர் சென்னை பதிப்பின் பொறுப்பாசிரியராக பணியாற்றிய அ.குமரேசன், அவரது புதல்வரும் குறும்பட இயக்குநருமான ஜெயச்சந்திர ஹஸ்மி ஆகியோர் எழுதியுள்ள பதிவுகள் இதனை உறுதி செய்கின்றன.

கோவை மாநகரில் இருந்த தீண்டாமைச் சுவர் அவரது ஆட்சிக் காலத்தில் தீக்கதிர் செய்தியின் எதிரொலியாக எவ்வாறு அகற்றப்பட்டது. இதோ கண்ணனின் விவரிப்பு:
காலை 5.30 மணி மொபைல் போன் ரிங்…அடிக்கிறது…

சார் நான் பிஆர் ஓ பேசுகிறேன்… கலெட்டர் சார் தீக்கதிர் கேட்கிறார்….

வீட்டிற்கு வருகிறேன்… கொடுக்க முடியுமா..?

ஏன் சார் இவ்வளவு அவசரம்…

காலையிலேயே முதல்வர் கலைஞர் கலெக்டர் சாரை அழைத்து ( டாக்டர் உமாநாத் ) “ உமா இன்றைய தீக்கதிர் படித்தாயா..? என கேட்டாராம்…

நீங்கள் அப்படி என்ன செய்தி போட்டிருக்கிங்க சார்….. ?

பல செய்தி போட்டிருக்கிறோம்… கலைஞர் எதை கேட்கிறார் என தெரியவில்லையே…

ஏதோ சுவாராமில்ல….

ஆமா தீண்டாமை சுவர்… எங்க…

கோவை பெரியார் நகரில் ….
( கோவை மாநகராட்சி, சிங்கா நல்லூர் 10வது வட்டம் காமராஜர் ரோடு அருகில் உள்ள, தந்தை பெரியார் நகர்.

தந்தை பெரியார் நகரிலிருந்து ஜீவா வீதி வழியாக, காமராஜர் ரோடு எனும் பிரதான சாலையை இணைக்கும் 30 அடி சாலை உள்ளது. இச்சாலை வழியாகத்தான் பெரியார் நகரில் வசிக்கும் அருந்ததியர் மக்கள் காமராஜர் சாலைக்கு செல்ல வேண்டும். ஆனால், அருந்ததியர் மக்கள் செல்லும் இச்சாலையை சாதி ஆதிக்க சக்தியினர் சிலர் தீண்டாமை எண்ணத்தோடு சுவர் கட்டியெழுப்பி மறைத்திருந்தனர்.)

அப்படியா அதுதான் கேட்டிருக்கிறார்….

சரி வாங்க தீக்கதிர் தருகிறேன்… நான் ஆள் அனுப்பி விடுகிறேன் கொடுத்து விடுங்கள்…

நான் கலெக்டர் கேம்ப் ஆபீஸ்க்கு செல்கிறேன்.. என்றார்….

அன்று காலை 8.30 மணிளவில் .. சார் நீங்க உடனே கேமராவுடன் கிளம்பி பெரியார் நகர் வாங்க

சார்… ஏன் சார் என்ன விஷேசம்…

முதல்வர் ஐயா.. ( கலைஞர் ) … தீக்கதிர் செய்தியை வைத்து கொண்டு நேரில் சென்று ஆய்வு செய்.. என்றாராம்..

உண்மை என்றால் உடனே அந்த சுவற்றை அகற்றி விட்டு எனக்கு தகவல் சொல் என்று கூறியிருக்கிறாரம்…

அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் மொபைல் போன் ரிங் அடிக்கிறது…

நான் கலெட்டர் உமா நாத் பேசுகிறேன்.. சொல்லுங்க சார்.. நீங்க கிளம்பிட்டீங்களா… இப்பத்தான் கிளம்பிக்கொண்டு இருக்கிறேன்.. போட்டோ கிராப்பரையும் அழைத்து வாருங்கள்… எங்களுக்கு போட்டோ கிராப்பர் தனியா இல்ல சார்… நான் தான் கேமராவுடன் வருவேன் என்றேன்.. சரி வாங்கள் என்று கூறினார்..

அடுத்த 30 நிமிடங்களில் பெரியார் நகரில் தீண்டாமை சுவர் இருந்த இடத்தில் …. ஏராளமான அதிகாரிகள்… காவல்துறையினர் குவிந்திருந்தனர்… சர்வேயர்கள் அப்பகுதி முழுவதையும் அளந்து கொண்டிருந்தனர்…

இருதரப்பிலும் மக்கள் கூட்டம்… அருந்ததியர் பகுதியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் யு.கே.சிவஞானம், ரவிக்குமார், பெருமாள், வெண்மணி, கணேஷ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் சிங்காநல்லூர் நகரச் செயலாளர் மனோகரன், மாவட்டச் செயற்குழு உறுப் பினர் நெல்சன்பாபு, மாவட்டக் குழு உறுப்பினர் தெய்வேந்திரன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அ.ர.பாபு உள்ளிட்ட ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

ஆட்சியர் டாக்டர் உமாநாத் வந்திருக்கினார்… அதிகாரிகள்.. இது பொதுவழி ஆக்கிரமித்து தீண்டாமை நோக்கத்தோடு சுவர் எழுப்பட்டிருப்பது உண்மைதான் சார் என்கின்றனர்…..
உடனே அழைத்து வரப்பட்டிருந்த ஜேசிபியை கொண்டு அந்த சுவரை இடிக்க உத்தரவிட்டார்… பரபரப்பு ஏற்பட்டது. சுவரும் இடித்து தள்ளப்பட்டது… ஒரு புறம் அருந்ததியர் மக்களும் மார்க்சிஸ்ட் கட்சியினரும் இணைந்து நின்று கரகோஷம் எழுப்பினர்…

சுவர் இடிந்து விழுந்து நொறுங்கிக் கொண்டிருந்தது.அருகில் இருந்த ஒரு வீட்டின் மீது ஏறி நின்று அனைத்து கோணங்களிலும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன்…
மீண்டும் அழைத்த ஆட்சியர் உமாநாத்.. நாளை படத்துடன் செய்தி வெளியிடுங்கள்… முதல்வர் கேட்பார் .. என்று சிரித்தவாறே கூறினார்…

கலைஞர் முதல்வராக இருந்த போது மார்க்சிஸ்ட் கட்சிக்கும், திமுகவிற்கும் பல்வேறு விஷயங்களில் நிறைய கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது. தீக்கதிர் பலமுறை கருணாநிதியை கடுமையாக விமர்ச்சித்திருக்கிறது. அதே தீக்கதிரில் வரும் செய்திகளை குறித்து வட்டமிட்டு உடனே அதிகாரிகளை அழைத்து நடவடிக்கை எடுக்க சொல்லும் அந்த சிறந்த பண்பு… நிர்வாக திறமை அந்த கலைஞருக்கு மட்டுமே உரியது…
பல வரலாறுகளை உருவாக்கிய கலைஞைர் இன்று வரலாறாகியிருக்கிறார்…..

2004 ஆம் ஆண்டு திமுகவின் தென்மண்டல மாநாடு விருதுநகரில் நடைபெற்ற பொழுது, மேடையிலிருந்த கலைஞர் கீழே தீக்கதிர் நிருபர் இருப்பார். அவரிடம் சென்று தீக்கதிரை வாங்கி வா என்று கூற, கீழ வந்த அவரது உதவியாளர், செய்தி சேகரிக்க சென்றிருந்த மாவட்ட நிருபர் கண்ணனிடமிருந்து மடிக்கப்பட்டு ஜோல்னா பையில் வைக்கப்பட்டிருந்த தீக்கதிரை பெற்று கலைஞரிடம் கொடுக்க, முதலில் தலைப்புகளை படித்த கலைஞர் பின்பு ஒட்டுமொத்த தீக்கதிரையும் படித்து முடித்துவிட்டு கண்ணனை பார்த்து தலையசைத்திருக்கிறார். திமுக மாநாடு குறித்து தீக்கதிர் கொடுத்திருந்த தலைப்புக்கு தரப்பட்ட அங்கீகாரம் அது என்றும் நினைவு கொள்கிறார் கண்ணன்.

தீக்கதிர் முன்னாள் நிருபர் ப.கவிதாகுமார் தன்னுடைய பதிவில் மதுரை கலெக்டர் அதிகாலையில் அழைத்து இன்று தீக்கதிரில் மதுரை பற்றி என்ன செய்தி வந்துள்ளது எனக் கேட்க, மதுரை நாகமலைப் புதுக்கோட்டை அருகே கீழக்குயில்குடியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பது பற்றி செய்தி வந்துள்ளதாக இவர் கூற, கலெக்டர் கேம்ப் ஆபிசுக்கு தீக்கதிர் செல்லும் முன்பே கலைஞர் சென்னையில் படித்துவிட்டு அழைத்து கலெக்டரை நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருப்பது தெரியவந்துள்ளது.

சாதிய அடிப்படையில் மார்க்சிஸ்ட் கட்சி செயலாளரை ஊரைவிட்டு ஒதுக்கி வைக்க காரணமாக இருந்த 8 பேர் அன்றே கைது செய்யப்பட்ட நிலையில் போலீஸ் குவிக்கப்பட்டு பதற்றம் தணிக்கப்பட்டதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.தீக்கதிரில் வந்த செய்தி அடிப்படையில் 600 ஆயுள் சிறைவாசிகளுக்கு முதல்வராக இருந்த கலைஞர் விடுதலை அளித்ததையும், தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லம் சீர்செய்யப்பட்டதையும் கவிதாகுமார் நினைவுபடுத்தியுள்ளார்.

மதுரை மாவட்டம் உத்தபுரம் தீண்டாமைச் சுவர் குறித்து தீக்கதிரில் ‘அகற்றப்படவில்லையென்றால் உடைக்கப்படும்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் இருந்த பிரகாஷ்காரத் உத்தபுரம் வந்தநிலையில், தீண்டாமைச் சுவர் ஒரு பகுதியை அரசு இயந்திரம் அகற்றிக் கொண்டிருந்தது.

தீக்கதிர் சென்னை பொறுப்பாசிரியராக இருந்த அ.குமரேசன் கூறுகிறார்: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விவேகானந்தர் நினைவு இல்லத்தில் ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த வரலாற்றுக் கண்காட்சியை முதல்வராக இருந்த கருணாநிதி திறந்துவைத்து உரையாற்றியதை தீக்கதிரில் செய்தியாக வெளியிட்டதோடு, அங்குள்ள ஒரு ஓவியத்தில் முகலாயரின் வருகைக்கு பின்பு இந்தியாவின் கலாச்சாரம் சீரழிக்கப்பட்டது என்று எழுதப்பட்டுள்ளது சரிதானா? இதை முதல்வர் கவனிக்கவில்லையா? முகலாயரின் வருகைக்குப் பின்பு பன்முக பண்பாடு பலப்பட்டது என்றல்லவா எழுதியிருக்க வேண்டும் என ஒரு பெட்டி செய்தியில் கூறியிருந்தேன். அடுத்த நாளே முதல்வர் அலுவலகத்திலிருந்து அழைத்து இப்போது சென்று பாருங்கள். அந்த படத்திற்கு கீழே உள்ள வாசகங்களை கறுப்பு தாள் ஒட்டி மறைத்துவிட்டார்கள் என்று கூறினார்கள். ஒரு பெட்டி செய்தியைக் கூட நுட்பமாக கவனிப்பவர் கலைஞர்.

தீக்கதிரில் பயிற்சி நிருபராக பணியாற்றிய ஜெயச்சந்திர ஹஸ்மி, சைதாப்பேட்டை ரயில்நிலையத்தை யொட்டி அமைக்கப்பட்ட சுரங்க நடைபாதையை முதல்வர் திறந்துவைத்துள்ளார். ஆனால் அருகில் உள்ள சிறு சுவரை இடிக்காமல் விட்டதால் மக்கள் சுரங்கப் பாதையை பயன்படுத்தாமல் ரயில் தண்டவாளத்தை கடக்கின்றனர். இது மிக ஆபத்தானது என்று ஒரு செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார். அடுத்த நாளே அந்த சுவர் இடிக்கப்பட, மக்கள் சுரங்கப்பாதையை பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதையும் தீக்கதிர் அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் முதல்வர் அலுவலகத்திலிருந்து தெரிவித்துள்ளனர்.
தீக்கதிரில் எழுதப்படுகிற தலையங்கத்தை யார் எழுதியிருக்கிறார்கள் என்று கூறும் அளவுக்கு தீக்கதிரில் எழுதுவோரை பற்றி தெரிந்து வைத்திருந்தார் கலைஞர் என்று ஒருமுறை கூறினார் தீக்கதிர் சென்னை பதிப்பின் முதல் பொறுப்பாசிரியர் சு.பொ.அகத்தியலிங்கம்.

அதிகாரிகள் தீக்கதிர் ஒரு பதிப்பை கொண்டுப் போய் கொடுத்தால், அவர்கள் இரண்டு பதிப்பு வெளியிடுகிறார்கள். முதல் பதிப்பு எங்கே? என்று கேட்டு திணறடிப்பாராம் கலைஞர்.
திமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த காலத்தில் முரசொலிக்கும் தீக்கதிருக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் நடந்தது. ‘தீக்கதிர் திருத்திக் கொள்ளுமா’ என முரசொலி கேட்கும். ‘முரசொலி தெளிவு பெறுமா’ என தீக்கதிர் கேட்கும். இரண்டு பத்திரிகைகளுக்கும் இடையில் பல வாரங்கள் விவாதம் நடந்தது. ஒரு நிலையில் கலைஞர் திமுக முக்கிய தலைவர் ஒருவரிடம் தீக்கதிரில் எத்தனை பேர் எழுதுகிறார்கள் பாருங்கள். அத்தனைக்கும் நான் ஒருவனே பதில் சொல்ல வேண்டியிருக்கிறது என்று கோபித்துக் கொண்டாராம். பின்பு முரசொலி எழுத்தாளர்கள் பலரும் தீக்கதிருக்கு பதில் எழுதுவார்கள். முக்கியமான கட்டத்தில் கலைஞரே களத்தில் இறங்கி கேள்வி – பதிலாகவும் உடன்பிறப்புகளுக்கு கடிதமாகவும் எழுதுவார். ஆனால் அத்தனையும் அரசியல், தத்துவம் சார்ந்து அமைந்ததே அன்றி தனிநபர் தாக்குதல் ஒருபோதும் இல்லை.

ஒருமுறை பெரியார் நினைவுநாளன்று தீக்கதிரில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அன்றைக்கு அவரை சந்திக்க சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் என்.வரதராஜன், தே.லட்சுமணன் ஆகியோரிடம் இந்த கட்டுரையை குறிப்பிட்டு பாராட்டி இருக்கிறார்.
என்.வரதராஜன் என்னை சந்தித்த போது, கலைஞர் உங்கள் எழுத்துக்களை படிக்கிறார், கவனமாக எழுதுங்கள் என்றார்.

நெல்லையில் நடைபெற்ற முப்பெரும் விழா பட்டிமன்றத்தில் பேசி முடித்துவிட்டு இறங்கியவுடன் கைகொடுத்து பேச்சை பாராட்டிய அவர், தீக்கதிரில் மதுரை சொக்கன் என்ற பெயரில் எழுதுவது நீங்கள்தானா என்று கேட்டார்.

முரசொலிதான் எனது முதல் குழந்தை என்று அவர் அடிக்கடி கூறுவார். அந்தளவுக்கு முரசொலியோடு கலந்திருந்தவர் அவர். தீக்கதிர் தனது முதன்மையான வாசகரை இழந்துவிட்டது. தமிழ் கூறும் நல்லுலகம் ஒரு தலைசிறந்த பத்திரிகையாளரை இழந்திருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: