===நாகைமாலி===                                                                                                                   ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தீவிரமடைந்த போது, தமிழகத்தில் பல ஊர்களில் மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். திருவாடானையில் இரண்டு பேருந்துகள் எரிக்கப்பட்டன. போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் படுகாயமுற்றனர். இதனால் ஆத்திரமடைந்த கூட்டத்தினர் தேவக்கோட்டை நீதிமன்றத்திற்குள் புகுந்தனர்.

அங்கிருந்த ஆவணங்களை எடுத்து, நீதிமன்றக் கட்டிடத்திற்குத் தீ வைத்தனர். நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் ஊழியர்களும் கொல்லைப்புற வாசல் வழியாக ஓடி உயிர் தப்பினர். இதனால்,ஆத்திரமடைந்த போலீசார், போராட்டக்காரர்களைப் பிடித்துப் பனைமரத்தில் கட்டிவைத்துத் துப்பாக்கியால் சுட்டனர்.தேவகோட்டை நீதிமன்றம் முன்பு, மறியல் செய்ததற்காகக் காங்கிரஸ் பிரமுகர்கள் சிலரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போராட்டக் காரர்கள் கூட்டமாகச் சென்று, கிளைச் சிறையின் பூட்டை உடைத்து, உள்ளே அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களை வெளியில் கொண்டு வந்தனர்.

சென்னையில் பி அன்ட் சி மில் தொழிலாளர்கள் தடையை மீறி ஊர்வலம் சென்றனர். ஊர்வலத்தின் மீது போலீசார் சுட்டதில் ஒன்பது தொழிலாளர்கள் பலியானார்கள்.கோவையில் மிகப்பெரிய கலவரம் மூண்டது. ராணுவ விமானம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. ராணுவ முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டுத் தீக்கிரை யாக்கப்பட்டது. 200 ராணுவ டாங்குகள் அடியோடு நாசமாக்கப்பட்டன. ராணுவத்தினர் சுட்டதில், 30 போராட்டக் காரர்கள் மரணமுற்றனர். இந்த ராணுவ முகாமுக்கு அருகில் வசித்த ஆண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, ஒரு வாரகாலம் ஓர் இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்டனர்.

நெல்லை மாவட்டத்தில், போராட்டக் காரர்கள் ஒன்று திரண்டு, உடன்குடி
யையும் சுற்றுப்புற கிராமங்களையும் கைப்பற்றிக் கொண்டனர். அதனை ‘சுதந்திரப் பிரதேசம்’ என்று பிரகடனம் வெளியிட்டனர்.ஒருவார காலம் வரை, போலீசாரோ ராணுவமோ இந்த சுதந்திரப் பிரதேசத்தை நெருங்க முடியவில்லை. ஒரு வாரம் கழித்து, ராணுவத்தினர் பெரும்படையுடன் சென்று, வீடு வீடாகப் புகுந்து வேட்டையாடி 115 புரட்சிக்காரர்களைக் கைது செய்தனர்.

மதுரை ஜான்சிராணி பூங்காவில் தடையை மீறிக் கூடிய பொதுமக்கள் மீது போலீசார் சுட்டதில் ஆறு பேர் உயிரிழந்தனர். மதுரை அஞ்சல் அலுவலகத்தை மாணவர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். கலவரம் பரவியதால்,‘ஊரடங்கு உத்தரவு’ பிறப்பிக்கப்பட்டது.
காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, அக்டோபர் 2-ஆம் தேதி, மதுரையில் ஊர்வலம் நடத்திய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்து, லாரியில் ஏற்றிச் சென்றனர். 8 மைல் தூரம் சென்றதும், அந்தப் பெண்களை ஒரு பொட்டல் காட்டில் இறக்கிவிட்டு, சேலைகளை உருவி, நிர்வாணப்படுத்தி விரட்டியடித்தனர். இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர் என்று அறியப்பட்ட சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மீது பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் திராவகத்தை வீசி, முகத்தை விகாரப்படுத்தினர்.

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் வீறுகொண்டு எழுந்த தமிழகப் புரட்சியாளர்களுக்கும் போராட்ட வீரர்களுக்கும் வீர வீணக்கம் !

கட்டுரையாளர் : சிபிஎம் நாகை மாவட்டச்செயலாளர், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்

Leave a Reply

You must be logged in to post a comment.