தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூர் கிழக்கு சாலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க வீரசிங்கம்பேட்டை சிற்றூர் உள்ளது.

இவ்வூர் தஞ்சையிலிருந்து 13 கிமீ தூரத்தில் உள்ளது.ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி பேராசிரியர் வீரசிங்கம்பேட்டை சீனி.பிரபாகரன், புண்ணியமூர்த்தி ஆகியோர் அளித்த தகவலின் அடிப்படையில் சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதரும், ஆய்வாளருமான மணிமாறன் மற்றும் சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான வெ.ஜீவக்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வு குறித்து மணிமாறன் கூறியதாவது:- தஞ்சையில் இருந்து திருவையாறு நோக்கி வடக்கே செல்லும் சாலையில் அமைந்துள்ளது கண்டியூர். அட்டவீரட்டத்தலங்களுள் ஒன்றான கண்டியூர் கோவிலை ஒட்டி கிழக்கு நோக்கி சென்றால் வீரசிங்கம்பேட்டையை அடையலாம்.

வீரசிங்கம்பேட்டையைச் சுற்றிலும்திருச் சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருப்பழனம் ஆகிய பாடல் பெற்ற தலங்கள் உள்ளன. இவ்வூர்பல்லவர் காலத்தில் நந்திபுரம் என அழைக்கப்பட்டது. இங்கு பல்லவர் காலம் தொட்டு அரண்மனையும், ஆயிரத்தளி எனும் கோவிலும் திகழ்ந்ததை வரலாற்று அறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியம் தனது நந்திபுரம் எனும் நூலில் தெரிவித்துள்ளார்.கி.பி.750-ல் பல்லவர் காலம் தொடங்கி கி.பி.1218-ல் வரை ஆட்சி செய்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலம் வரை கிட்டத்தட்ட 450 ஆண்டுக்கு மேலாக பல்லவர், சோழர் மற்றும் பாண்டியர் வரலாற்றில் மிகச் சிறந்த பெருநகராக விளங்கியது நந்திபுரம் என்ற ழைக்கப்பட்ட இன்றைய வீரசிங்கம் பேட்டை. இவ்வூரில் ஆயிரம் லிங்கங்களுடன் கூடிய பெருங்கோவிலும், மன்னர்களின் அரண்மனையும் இருந்தது. பிற்காலத்தில் மாலிக்காபூர் படையெடுப்பால்(கி.பி.1311) தாக்குதலுக்கு ஆளாகி அழிந்து போயிற்று.

இரண்டாம் நந்திவர்மன் காலத்தில்(கி.பி.731-795) பின்பற்றப்பட்ட சிவமரபுகளில் லகுலீசபாசுபதம் என்பதும் ஒன்றாகும். தமிழகத்தில் இச்சித்தாந்தத்தைப் பின் பற்றிய பகுதி இப்பகுதியாகும். இச்சித்தாந்தத்தின் சிறந்த வழிபாடாக வணங்கப்பட்ட கடவுள் வாகீச சிவன் என்ற வடிவமாகும். கி.பி.8, 9-ம் நூற்றாண்டுகளின் வரலாற்றுப் பெருமையை பறைசாற்றும் வாகீசர் சிற்பம் வீரசிங்கம் பேட்டையின் இளமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள பள்ளர்குளத்திற்கு அருகேயுள்ள தென்னந்தோப்பில் தென்னங்கன்றுகளை பதியமிடுவதற்காக குழிதோண்டிய போது கண்டெடுக்கப்பட்டது. இச்சிற்பம் நான்கு முகங்கள், நாற்கரங்களுடன் தாமரை பீடத்தின்மீது ஒரு காலை மடித்து அமர்ந்த நிலையில் அணிகலன்கள் திகழஅழகே வடிவாக ஐந்தடி உயரத்தில்பல்லவ சிற்பிகளின் உயிரோட்டமான சிற்பநுட்பத்தை பறைசாற்றும் விதத்தில் காணப்படுகிறது. மண்ணில் புதைந்து கிடந்த வாகீசரை அப்பகுதி மக்கள் மண்ணில் இருந்துமீட்டு அமர்த்தியுள்ளனர். இதே போன்ற பல்லவர் காலத்து வாகீசர் வடிவங்கள் தஞ்சை அரண்மனை கலைக்கூடத்திலும், மாவட்ட பழைய ஆட்சியர் அலுவலகம் முன்னரும் நிறுவப்பட்டுள்ளன. வாகீச சிற்பங்கள் இப்பகுதியைத்தவிர தமிழகத்தின் வேறெந்த பகுதியிலும் காண முடியாது.தமிழகத்தில் லகுலீச பாசுபதத்தின் மையமாகத் திகழ்ந்த இவ்வூரில் இன்னும் எத்தனை வாகீசரும், வாகீஸ்வரியும் பூமிக்குள் புதைந்திருப்பார்கள் என்பது தெரியவில்லை. வரலாற்றில் நந்திபுரம் என்ற ழைக்கப்பட்ட இவ்வூர் பின்னர் வீரசிங்கம்பேட்டை என்று பெயர்மாற்றம் பெற்றதைத் திருப்பூந்துருத்தி கல்வெட்டால் அறிய முடிகிறது. இவ்வாறு மணிமாறன் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.