தீக்கதிர்

சியட் டயர் தொழிற்சாலைக்கு குமரி ரப்பர் கொள்முதல் செய்ய சிஐடியு கோரிக்கை

குலசேகரம்,
தமிழ்நாடு அரசு சியாட் நிறுவனத்துடன் இணைந்து சென்னனையில் தொடங்கவிருக்கும் டயர் தொழிற்சாலைக்கு தேவையான இயற்கைரப்பரை கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என சிஐடியு தோட்டம்தொழிலாளர் சங்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட தோட்டம் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் எம்.வல்சகுமார் தமிழக முதல்வர், வேளாண்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர்உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழக அரசும் சியாட் டயர்நிறுவனமும் அண்மையில் சென்னையில் டயர்தொழிற்சாலை அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. 1989இல் கனரக ரப்பர் தொழிற்சாலை அமைத்திட அன்றைய அரசுகன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் எஸ்எல்பி பள்ளியில் கல்நாட்டுவிழா நடத்தியது. அதன்பின்புகனரக தொழிற்சாலை அமைப்பதற்கான குரல் எழுப்பப்பட்டும் எந்த நடவடிக்கையும் தமிழக அரசு தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை. பின்னர் செண்பகராமன்புதூரில் ரப்பர் பூங்கா அமைப்பதாக அரசு அறிவித்தாலும் அதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தேக்க நிலையில் உள்ளன.

ரப்பர் வாரியத்தால் சிறப்பானது என கூறப்படுவது கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் ரப்பர் பால்.அதிலும் குறிப்பாக களியல் பகுதியில் கிடைக்கும் ரப்பர் மிகவும் தரமானதாக குறிப்பிடப்படுகிறது. அரசு ரப்பர் கழகத்துக்கு இப்பகுதியில் உள்ள மருதம்பாறை, சிற்றார், மைலார், கல்லார்மற்றும் இதையொட்டிய மணலோடை, காளிகேசம், கீரிப்பாறை, பரளியார் ஆகிய இடங்களில் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. மேலும், கல்குளம், விளவங்கோடு,தோவாளை தாலுகாக்களில் அதிகஅளவில் ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ரப்பர் தொழிலை நம்பி சுமார் 5 லட்சம் பேர் உள்ளனர். தற்போதுரப்பர் விலை வீழ்ச்சியைத் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கு உரிய ஊதியம் கூட பெற முடியாத நிலை உள்ளது.

ரப்பர் விலை வீழ்ச்சிக்கு தொழிலாளர்கள் காரணமல்ல, ஆனாலும், அதன் பாதிப்புகள் தொழிலாளர் கள் மீதே சுமத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு, சியாட் நிறுவனத்துடன் கனரக ரப்பர் தொழிற்சாலையான டயர் ஆலை அமைப்பது தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக உள்ளது. இத்தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருளான அரிய வகை இயற்கை ரப்பர் லேட்டக்ஸ் கன்னியாகுமரி மாவட்ட மலையோர பகுதிகளில்உள்ள 75 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பிலிலிருந்து தமிழக அரசே சேகரித்து டயர்ஆலைக்கு வழங்கினால் ரப்பர் விவசாயிகளும், தொழிலாளர்களும் பெரும்பயனடைவார்கள். மேலும், அரசு ரப்பர்கழகத்தின் 5ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தற்போதுள்ள உற்பத்தியை அதிகரித்திடவும், சாகுபடி பரப்பை அதிகரித்து கூடுதல் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் முடியும். கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான ரப்பர் நிறுவனமும், ரப்பர் கூட்டுறவு சங்கமும், ரப்பர்வணிக மையமும் உள்ள நிலையில்அவற்றை சீராக இயக்கி அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும். கேரள மாநிலத்தில் பிர்லா நிறுவனம் 1957இல் கோழிக்கோடு மாவட்டம் மாவூர் என்கிற இடத்தில் தொடங் கிய கரயோன்ஸ் நிறுவத்திற்கு கேரளஅரசே மூலப்பொருளான ரப்பரைவழங்கியது. அதுபோல் கன்னியாகுமரிமாவட்ட ரப்பரை அரசே கொள்முதல் செய்து சியட்டயர் தொழிற்சாலைக்கு அளிக்க வேண்டும். அதன் மூலம் ரப்பர்விலை வீழ்ச்சியால் அவதிப்படும் மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை வழங்கிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.