கோவை,
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி மறைவையொட்டி புதனன்று தொழில்நகரமான கோவை துயில் கொண்டது.

தமிழகத்தின் மிக மூத்த அரசியல், கலை, இலக்கியம் ஆளுமை செலுத்தி முத்திரை பதித்தவர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி. வயது மூப்பின் காரணமாக செவ்வாயன்று காவிரி மருத்துவமனையில் காலமானார். ஐந்து முறை தமிழக முதல்வராக விளங்கிய கலைஞர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழக அரசு புதனன்று அரசு விடுமுறை அறிவித்தது. இவரின் மறைவிற்கு திமுக தொண்டர்கள் மட்டுமின்றி நாடே அஞ்சலி செலுத்தியது. குறிப்பாக, தமிழகத்தின் மூத்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தொழில் நகரமான கோவையில் ஆலைகள் இயங்கவில்லை, எந்நேரமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறும் சாலைகள் ஆள்ஆரவாரமற்று அமைதியாக துயில் கொண்டது. வணிகப் பகுதிகளான காந்திபுரம், டவுன்ஹால், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் நூறு சதவிகிதம் கடைகள் அடைத்து வியாபாரிகள் தங்களது துயரத்தை பகிர்ந்து கொண்டனர். ஆவராம்பாளையம், கணபதி, பீளமேடு உள்ளிட்ட சிறு,குறுதொழில் கூடங்களில் இயந்திரங்கள் கலைஞருக்கு இரங்கல் தெரிவித்து முழு ஓய்வை எடுத்துக்கொண்டது.

மேலும், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மதிமுக, தபெதிக உள்ளிட்ட அனைத்து அரசியல் இயக்கங்ளைச் சேர்ந்தோர் கட்சிவேறுபாடற்று கலைஞர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர். இதன்ஒருபகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ஜெயபால், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், சிபிஎம் கிழக்கு நகரக்குழு செயலாளர் என்.ஜாகீர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இதேபோல், கோவை காந்திபுரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பத்திரிக்கையாளர்கள் அஞ்சலி
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து பத்திரிக்கையாளர்கள் சார்பில் மூத்த பத்திரிக்கையாளர் கலைஞர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களும் கருப்பு சட்டை அணிந்து கலைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: