சென்னை,
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் செவ்வாயன்று மாலை உயிரிழந்தார்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி தலைமையிலான அரசு நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி மெரினாவில் இடம் ஒதுக்க மறுப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து திமுககலைஞர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யதது.

இதையடுத்து மனு மீது நேற்று இரவு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்றது.

இந்த மனு மீது பதிலளிக்கும்படி இன்று காலை 8 மணிக்குள் தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் அளிக்க வேண்டும் என  உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடங்கப்பட்ட 5 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டது.

இந்த நிலையில் தி.மு.க. தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் தொடங்கியது.  அதில், காந்தி மண்டபம் என்பது காங்கிரஸ் தலைவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம்.  காங்கிரசுக்கும், திராவிட கொள்கைகளுக்கும் வேற்றுமை உள்ளது.  அதனால் காந்தி மண்டபம் வேண்டாம்.

ராஜாஜி, காமராஜர் கொள்கை வேறு, கலைஞரின் கொள்கை வேறு.  மாற்று கொள்கை கொண்டவர்களிடையே கலைஞரை அடக்கம் செய்ய முடியாது.

அண்ணா நினைவிடம் மயான பகுதியாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.  22.9.1988ல் அண்ணா நினைவிடம் சமாதி பகுதியாக அறிவிக்கப்பட்டது.

அண்ணாவின் சித்தாந்தத்தினை பின்பற்றிய நிலையில் எம்.ஜி.ஆர். மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டார்.

அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றியவர் தி.மு.க. தலைவர் கலைஞர்.  அண்ணா நினைவிடத்தில் கலைஞர் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றே கோருகிறோம்.

உரிய மரியாதையுடன் கலைஞரின் உடலை அடக்கம் செய்ய வேண்டும்  கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் கட்டிடங்கள் எழுப்பவே அனுமதி பெற வேண்டும் என வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் கலைஞர் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.
இதையடுத்து ராஜாஜி அரங்கில் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த பகுதியில் கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க அனுமதியளித்ததை கேள்விப்பட்டு திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உட்பட குடும்ப உறுப்பினர்களும் திமுக மூத்த தலைவர்களும் கண்ணீர் விட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்பகுதியல் குழுமியுள்ள திமுக தொண்டர்களும் ஆரவாரத்துடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.