சென்னை,
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்மொழிக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் அவர் ஆற்றிய பணிகள் என்றென்றும் நினைவுகூரப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட்:
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில்,  அரசியல் ரீதியாக திராவிட இயக்க கொள்கைகளையும், பொதுவுடைமை கொள்கைகளையும் ஏற்று உறுதிபட செயல்பட்டார்.அவரது வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளையும், நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வெற்றி கண்ட கலைஞர் என்று தெரிவித்துள்ளார். தனது உடல் நலப்பாதிப்பில் இருந்தும் மீண்டு வருவார், நம்மோடு பயணிப்பார் என்ற நம்பிக்கையோடு இருந்தோம், நமது நம்பிக்கை பொய்யாகிவிட்ட போதிலும், தமிழக மக்களின் நெஞ்சங்களில் என்றென் றும் கலைஞர் நீங்காமல் நிலைத்து நிற்பார். அவரது மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் செங்கொடிதாழ்த்தி அஞ்சலி செலுத்துவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

திராவிடர் கழகம்:
தி.க. தலைவர் கி.வீரமணி தனது இரங்கல் செய்தியில், கலைஞர் உடலால் மறைந்திருக்கலாம். அவர் எந்தக் கொள்கைக்காக இலட்சியத்திற்காக திராவிட இயக்கத்திற் காக உழைத்தாரோ அதை குன்றாது மேலும் ஒளிவீசித் திகழ்ந்திட உறுதிமொழி எடுப்பதே நாம் அவருக்குக் காட்டும் மிகப்பெரிய மரியாதையாகும். கலைஞர் மறைந்தார் அவர் போற்றிய கொள்கைகள் ஓங்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள்:
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், 80 ஆண்டுகள் பொதுவாழ்க்கை; எனினும், ஒவ்வொரு நொடியும் போராட்டம்! எத்தனை எத்தனை இடர்கள்; தடைகள்! எத்தனை எத்தனை சதிகள்; பழிகள்! அனைத்தையும் தகர்த்துத் தவிடுபொடியாக்கி, அரசியல் சிகரத்தின் உச்சத்தைத் தொட்ட ஆற்றலாளர் தலைவர் கலைஞர் என்று குறிப்பிட்டுள்ளார். மிகவும் எளிய சமூகப்பின்னணியில் தோன்றி, அரசியல், சமூகம், இலக்கியம் போன்ற அனைத்துத் தளங்களிலும் அளப்பரிய சாதனைகள் செய்து அழியாப் புகழீட்டியுள்ள வரலாற்றுத் தலைவர் கலைஞர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

பாமக:
பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், திமுக தலைவர் கலைஞரிடம் தாம் வியந்த விஷயம் நெருக்கடிகளுக்கு பணியாமல் போராடும் குணம் தான். நெருக்கடி நிலை காலத்தில் கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டது மட்டுமின்றி, அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் உள்ளிட்ட திமுக தொண்டர்கள் கடுமையான நெருக்கடிகளுக்கு ஆளாயினர். ஆனாலும் அவற்றுக்கு கலைஞர் பணியவில்லை என்பது மட்டுமின்றி, தேசியத் தலைவர்கள் பலருக்கு தமிழகத்தில் அடைக்கலம் கொடுத்ததன் மூலம் நெருக்கடி நிலை கொடுமைகளில் இருந்து காப்பாற்றினார் என்ற புகழாரம் சூட்டியுள்ளார்.

காங்கிரஸ்: 
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் விடுத்துள்ள அறிக்கையில், சமூக நீதிக் காவலராய், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும் கேடயமாய் திகழ்ந்தவர். சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கி, பெண்களுக்கு சம உரிமை நல்கி சொத்தில் சம பங்கு தந்தவர் கருணாநிதி. தமிழ்நாடும், தமிழினமும், தமிழ் மொழியும் உள்ளவரை அண்ணன் கருணாநிதியின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் என்று குறிப் பிட்டுள்ளார்.

மதிமுக:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கண்ணுக்கு இமையாக நீங்கள் கட்டிக் காத்த திராவிட இயக்கத்தை பகைக் கூட்டம் நெருங் கொணாது உங்கள் எழுத்தும், செஞ் சொல் வீச்சும், அஞ்சாத நெஞ்சுரமும் எந்நாளும் காத்து நிற்கும். விண்ணும் மண்ணும் இருக்கும் வரை வாழும் தமிழோடு உங்கள் கீர்த்தியும் நிலைத்து நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.

தமாகா:
கருணாநிதியின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. தமிழக அரசியல் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் கருணாநிதி ஆற்றிய பங்கு சிறப்பானது. அரசியல், சமூக நீதி மற்றும் மாநில உரிமைகள் ஆகியவற் றுக்காக சமரசம் செய்து கொள்ளாத போராளி அவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், திமுகவினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

மமக:
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, விடுத்துள்ள அறிக்கையில், சமூகநீதி என்றால் இடஒதுக்கீடு என்ற அளவில் முடிந்துபோய் விடக்கூடியது அல்ல, எல்லா நிலையிலும் எவரும் சமத்துவம் என்ற நிலையை எய்து
வதே என்ற புரிதலை கருணாநிதி கொண்டிருந்தார். கருணாநிதியின் மறைவு ஒவ்வொரு தமிழருக்கும் சமூக நீதி போராளிகளுக்கும் தனிப்பட்ட இழப்பாகும் என தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி:
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், தனது இரங்கல் செய்தியில், இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியும் தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற வருமான கருணாநிதி யின் மறைவு உலகத் தமிழர்களுக்கு பேரிழப்பாகும்.

முஸ்லிம் லீக்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கலைஞர் சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் உள் உணர்வுகளை புரிந்து கொண்டு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு, உருது மொழிக்கான அகாடமி, சிறுபான்மை நல வாரியம், சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டுக் கழகம், காயிதே மில்லத் பெயரால் கல்லூரிகள், காயிதே மில்லத் மணிமண்டபம், உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தது, முஸ்லிம் மகளிர் சுய உதவி சங்கத்திற்கு மானியம், இப்படி எண்ணற்ற சமூக நலத்திட்டங்களை சிறுபான்மை சமுதாயங்களுக் கென்றே வகுத்து நடைமுறைப்படுத்திய மாபெரும் மனிதநேயத் தலைவர் ஆவார் என்று கூறியுள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி:
கருணாநிதி 80 வருட கால அரசியலில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவில் பல பிரதமர்களை உருவாக்க காரணமாக இருந்தவர். ‘தமிழர்களின் பாதுகாவலர்’ என அவர் போற்றப்பட்டார். அவரது இழப்பு தமிழ் சமுதாய மக்களுக்கு பெரும் இழப்பு; அவரது வழியில் ஸ்டாலின் பயணிப்பார் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.