எரிவாயு விநியோக ஏலத்தை அதானி குழுமம் கைப்பற்றியுள்ள நிலையில் , இந்திய ரயில்வே துறைக்கு தண்டவாளங்களை விநியோகம் செய்வதற்கான ஏலத்தை, ஜிண்டால் ஸ்டீல் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது.

ரூ. 2 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான இந்த உலகளாவிய ஒப்பந்தத்தைக் கடந்த வாரம் ஜிண்டால் ஸ்டீல் – பவர் லிமிடெட் நிறுவனம் கைப்பற்றியதாக அதன் தலைவர் நவீன் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.

“இது ஒரு உணர்ச்சிப்பூர்வமான, பெருமையான தருணம். ஒரு கனவு நனவானதைப் போல உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இது ஒரு கனவைப் போல இருந்தது. நமது இந்திய ரயில்வே துறைக்கு ரயில் தண்டவாளங்களை விநியோகிப்பதை நான் எப்போதுமே ஒரு கனவாகக் கொண்டிருந்தேன்” என்றும் ஜிண்டால் கொண்டாட்டம் போட்டுள்ளார்.
“இந்திய ரயில்வே துறைக்குத் தண்டவாளங்களை விநியோகிப்பதையே எங்களது முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தோம்; சுமார் 15 ஆண்டுகளாக நாங்கள் உள்நாட்டு ரயில்வே துறைக்கான ஒப்பந்தத்துக்கு முயற்சித்து வந்தோம்” என்றும் தற்போது அது கைவரப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜிண்டால் நிறுவனம் 2003-ஆம் ஆண்டில் தனது ராய்கர் தொழிற்சாலையில், ரயில் தண்டவாளம் உற்பத்தி ஆலை ஒன்றை நிறுவியது. இதன்மூலம், தண்டவாளங்கள் உற்பத்தியில் இந்திய ஸ்டீல் ஆணையத்துக்கு, அடுத்த நிறுவனமாக ஜிண்டால் ஸ்டீல் தன்னை வெளிக்காட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: