கோவை,
மத்திய மோடி அரசின் மோட்டார் வாகன சட்டதிருத்தை கண்டித்து செவ்வாயன்று சாலை போக்குவரத்து தொழில் சார்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைதாகினர்.

லாரி, பேருந்து, டெம்போ, டேக்சி, ஆட்டோ உள்ளிட்ட சாலை போக்குவரத்தை நம்பி கோடிக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பொது போக்குவரத்தை கார்ப்ரேட்டுகள் கபளீகரம் செய்வதற்கு ஏதுவாக மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசின் இந்த தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து ஆகஸ்டு 7 ஆம் தேதியன்று (செவ்வாய்கிழமை) நாடு தழுவிய அளவில் சாலை போக்குவரத்து தொழில் சார்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்திருந்தது. இதன்ஒருபகுதியாக கோவையில் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் கூட்டு கமிட்டியின் தலைவரும், சிஐடியு கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான பி.கே.சுகுமாறன் தலைமையில் காந்திபுரம் நகர பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் சிஐடியு செல்வம், முத்துக்குமார், ஏஐடியுசி கார்த்திகேயன், எல்பிஎப் வணங்காமுடி, தேமுதிக அந்தோணி, எம்எம்கே பசீர், எம்எல்எப் ரங்கநாதான் உள்ளிட்ட சிஐடியு, ஏஐடியுசி, எம்எல்எப், தேமுதிக, எம்.எம்.கே உள்ளிட்ட ஆட்டோ தொழிற்சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைதாகினர். முன்னதாக கோவை மாவட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்களை இயக்காமல் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை போக்குவரத்து தொழிற்சங்கம்:
இதேபோல், டெம்போ, டேக்சி, வேன், லாரி, மேக்சிகேப், டாடாஏசி உள்ளிட்ட சாலை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் காந்திபார்க் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க சம்மேளன பொதுச்செயலாளர் எஸ்.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம், மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் வேளாங்கண்ணிராஜ், ப.காளியப்பன், அருணகிரிநாதன் மற்றும் சிஐடியு சாலை போக்குவரத்து சங்க மாவட்ட தலைவர் வேணுகோபால், ஏஐடியுசி சார்பில் கணேசன், எல்பிஎப்வேலுமணி, ஓட்டுநர் பயிற்சி பள்ளி சண்முகவடிவேல், இருசக்கர வாகனபணிமனை ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தின் சங்கர்,லாரி ஓட்டுநர் கிளினர்சங்கம் மோகன், ஓட்டுநர் உரிமையாளர் சங்கத்தின் சுப்புராஜ் மற்றும் கந்தசாமி உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுமத்திய அரசின்மோட்டார் வாகன சட்ட திருத்ததை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இருசக்கர வாகன பணிமனைகள் அடைப்பு:
கோவை மண்டல இருசக்கர வாகன பணிமனை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் காந்திபுரம் அரசு விரைவு போக்குவரத்து பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சங்கத்தின் பொதுச்செயலாளர் தாமு முன்னிலை வகித்தார். இதில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று மோடி அரசை கண்டித்தும், சட்டதிருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

கேரள மாநிலத்திற்கு பேருந்து செல்லவில்லை:
மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ள நிலையில் கோவையில் இருந்து கேளராவிற்கு செல்லும் எந்த பேருந்தும் இயக்கப்படவில்லை. இதன்காரணமாக உக்கடம் பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் தலைமை தபால் நிலையம் அருகில் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சிஐடியு மாநில குழு உறுப்பினர் எஸ்.கே.தியாகராஜன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட தலைவர் பி.பன்னீர் செல்வம், செயலாளர் டி.உதயகுமார், தொமுச சார்பில் ரவிக்குமார், கணேசன், மாரிமுத்து, சந்திரசேகரன், எச்எம்எஸ் சார்பில் கோவிந்தராஜ், பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் சுந்தர்ராஜன், குமரேசன், முருகேசன், டிடிஎஸ்எப் கே.கோபு, மோட்டார் வாகன பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் அப்துல்வஹாப், எஸ்.சேகர், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்.ரங்கராஜன், ஆர்.மாதேஷ்வரன் உள்ளிட்டு அனைத்து சங்க நிர்வாகிகள் உள்ளிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஈரோடு:
ஈரோடு ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அரசு போக்குவரத்து கழக மாநிலத் துணைத் தலைவர் என்.முருகையா தலைமை வகித்தார். சாலைப் போக்குவரத்து சங்க மாவட்ட பொதுச்செயலாளர் பி.கனகராஜ், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சாலைப்போக்குவரத்து சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.தனபால், ஆட்டோ தொழிலாளர்கள் சங்க செயலாளர் ஷேக்தாவூத், மாவட்ட நிர்வாகிகள் பொன். பாரதி, சுந்தரராஜன் உட்பட ஓட்டுநர் பயிற்சி கூட்டமைப்பு, உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம், இருசக்கர வாகன பாதுகாப்பு சங்கம், நான்கு சக்கர வாகனம் பராமரிப்பு சங்கம், தற்காலிக ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.சுப்பிரமணியம், டூவிலர் மெக்கானிக் சங்க செயலாளர் பி.ரவிக்குமார், சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எ.கே.சந்திரசேகரன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் தமிழ்நாடு மோட்டார் தொழில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு நாமக்கல் மாவட்ட கன்வீனர் மற்றும் சிஐடியு மாவட்ட தலைவர் பி.சிங்காரம், டூ வீலர் மெக்கானிக் சங்க மாவட்ட செயலாளர் சண்முக சுந்தரம், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் கூட்டமைப்பின் தலைவர் சாமுண்டி சண்முகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி வாழ்த்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்க செயலாளர் தீனதயாளன் உட்பட சுமார் 700க்கும் மேற்போட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: