சென்னை,
ரேசன் கடை ஊழியர்களுக்கு இடைக் கால நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச்சருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஆக. 6ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய அறிவிப்பு செய்தனர். இதனையடுத்து கூட்டுறவுத்துறை சங்கங்களின் பதிவாளர் இரா.பழனிச்சாமி தலைமையில் ஆக. 5 அன்று அனைத்து சட்ட கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஊதியக்குழு அமைக்க இரண்டு நாட்களில் அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும், இரண்டு மாதங்களில் ஊதியக்குழு அமைக்க சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்ற அதிகாரிகளின் வாக்குறுதியை கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டது. இதனையடுத்து ஆக.6 அன்று நடைபெற இருந்த வேலைநிறுத்தத்தை கூட்டமைப்பு ஒத்திவைத்தது. இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை செவ்வாயன்று (ஆக.7) தலைமைச் செயலகத்தில் கூட்டமைப்புத் தலைவர்கள் இரா.பொன்னுராம் (எல்பிஎப்), ஆ.கிருஷ்ணமூர்த்தி (சிஐடியு), ராஜ்குமார் (ஏடியு), ஜெயபால் (ஐஎன்டியுசி), தினேஷ் (பணியாளர் சங்கம்), சந்திரசேகர் (அம்பேத்கர் தொழிற் சங்க பேரவை), திருஞானம் (எம்எல்எப்) மற்றும் சீனிவாசன் (ஏடிபி) உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். இச்சந்திப் பின்போது கூட்டுறவுத்துறை முதன்மைச்செயலாளர் குமார் ஜெயந்த், பதிவாளர் இரா.பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இப்பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அ.கிருஷ்ணமூர்த்தி, ஊதிய உயர்வு வழங்குவது குறித்து 2 மாதத்திற்குள் ஒரு குழு அமைத்து தீர்வு காணப்படும். இடைக்ககால நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சருடன் கலந்தாலோசித்து அறிவிக்கப்படும். ரேசன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களின் அளவு அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார். சேதார கழிவு அனுமதிப்பது தொடர்பாக பரிசீலித்து முடிவெடுக்கப்படும். மானியங்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரேசன் கடைக்கு பொருட்களை எடுத்துவரும் லாரி செலவினத்தை முதன்மை சங்கங்கள்தான் ஏற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், இனி ரேசன் கடை ஊழியர்கள் ஏற்கத்தேவையில்லை என்றும் அமைச்சர் கூறியதாக கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.