கோவை,
போதை ஊசி வழக்கில் கைதான வாலிபரின் மருத்துவ ஆவணம் குறித்து மற்றொரு அரசு மருத்துவரிடம் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளர்.

பெங்களூரில் இருந்து போதை ஊசி மருந்துகளை கடத்தி வந்து கோவையில் விற்பனை செய்ததாக கடந்த ஏப்ரல் மாதம் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அளித்த தகவலின் பேரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை சாய்பாபாகாலனி சேர்ந்த முகமது சிகாப், ஜாய் இமானுவேல், ஜூல்பிகர் அலி, அனாஸ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முகமது சிகாப் ஜாமீன் கேட்டு கோவையில் உள்ள இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதில், தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி உள்ளதால் உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியுள்ளார். இதற்கான மருத்துவ சான்றிதழ்களையும் இணைத்து இருந்தார். இந்த சான்றிதழில் அரசுமற்றும் ஒரு தனியார் மருத்துவமனை மருத்துவர் உள்பட இருவரின் கையெழுத்து இடம் பெற்று இருந்தது.

இந்த மனு நீதிபதி (பொ) சஞ்சய்பாபா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ ஆவணங்களில் இருந்த அரசு டாக்டரின் கையெழுத்து உண்மை தானா என்பது குறித்து விசாரித்து வரும் 6ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கோவை அரசு மருத்துவமனை முதல்வருக்கு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இதன்படி, திங்களன்று கோவை அரசுமருத்துவமனை முதல்வர் அசோகன் அறிக்கையை தாக்கல் செய்தார். இதில், சம்மந்தப்பட்ட கையெழுத்து இருந்ததாக கூறப்படும் அரசுமருத்துவர் உஷாவிடம் விசாரித்தபோது, மற்றொரு அரசு மருத்துவரான மன்சூர் என்பவர் அளித்த மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் கையெழுத்து போட்டதாகவும், ஜாமீன் கேட்டநபரை பார்த்தது இல்லை, அவர் என்னிடம் சிகிச்சை பெற்றது இல்லை எனவும் உஷா தெரிவித்து உள்ளதாக முதல்வர் அறிக்கை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து நீதிபதி சம்மந்தப்பட்ட மற்றொரு அரசு மருத்துவர் மன்சூரிடம் உரிய விசாரணை நடத்தி வரும் ஆக.10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மருத்துவமனை முதல்வருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: