ஈரோடு,
பழந்தமிழ் சிந்தனையானது அறிவியல் அடிப்படையாக கொண்டது என ஈரோட்டில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் எழுத்தாளர்கள் பேசினர்.

ஈரோடு வ.உ.பூங்காவில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் செவ்வாயன்று எழுத்தாளர் கணியன் பாலனின் பழந்தமிழக வரலாறு மற்றும் மூலச் சிறப்புள்ள தமிழ் சிந்தனை மரபு என்ற இரு நூல்கள் வெளியிடப்பட்டன. இவ்விரு நூல்களையும் தமிழ்நாடு மக்கள் மன்ற செயலாளர் கண குறிஞ்சி அறிமுகம் செய்து உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், தமிழக வரலாறு என்பது ஓர் உயர் நிலை சமூகமாக பண்டைய மேற்கத்திய சமூகங்களுக்கு இணையான ஒரு சமூகமாக தமிழ் சமூகம் இருந்துள்ளது என்பதை சங்ககால மற்றும் ஆட்சியாளர்கள், புலவர்கள் ஆகியவர்களின் காலம் குறித்து புரிதலை உண்டாக்கியுள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தி சங்க இலக்கிய கால கட்டத்தை கி.மு.750 – கி.மு.50 என உறுதி செய்கிறது.

புதிய ஆய்வு முறையில் கொண்டு கி.மு.350 முதல் கி.மு.50 வரையிலான பத்து காலகட்ட சங்ககால புலவர்கள், ஆட்சியாளர்களின் ஆண்டுகளை இந்தியா மற்றும் உலக வரலாற்றோடு இணைத்து முறைப்படி வரிசைப்படுத்தி கணித்து இந்நூல் வரையறை செய்துள்ளது. கணிப்பும், சேரன் செங்குட்டுவன் கி.மு 3 ஆம் நூற்றாண்டுக்கு உரியவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. இதுகுறித்து காலவரிசையுடன் கூடிய முழுமையான ஒரு வரலாற்றை இந்நூல் பதிவு செய்துள்ளது. அதேபோல், சிறப்புள்ள தமிழ் சிந்தனை மரபு என்ற நூலிலிருந்து எண்ணியம், சிறப்பியல் போன்ற பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனைகள், வட இந்திய தத்துவ உலகில் வேத காலத்தின் இறுதிக் காலம் முதல் 1500 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் புகழ் பெற்றிருந்தது. தமிழகத்தில் கிமு ஆயிரத்திற்கும் முன்பிருந்து வந்த நகர அரசுகள் தான் மெய்யியல் சிந்தனைகள் தமிழகத்தில் தோன்றி வளர்வதற்கான பின்புலமாக இருந்து, இந்த எண்ணியம், சிறப்பியம் குறித்து அவைகளை தோற்று வித்த தொல்காப்பியர், கணாதர் போன்றவர்கள் குறித்தும் வானமாமலை, சட்டோபாத்தியாயா, பிரேம்நாத், போன்றவர்கள் தரும் விரிவான விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது.

தொல்காப்பியத்தில் உள்ள பொருள் முதல்வாத மெய்யியல் கருத்துக்கள் குறித்தும், தொல்காப்பிய அடிப்படையில் தமிழகத்தில் இருந்து வகுப்புகள் குறித்தும் இந்நூல் ஆய்வு செய்துள்ளது. ஆக பழந்தமிழ் சிந்தனை என்பது அறிவியல் அடிப்படையும், பொருள் முதல்வாத மெய்யியல் கொண்ட கிரேக்க சிந்தனையை விட சில விடயங்களில் மேம்பட்ட ஒரு மிகச் சிறந்த சிந்தனை என்பதை இந்நூல் பல வகைகளில் உறுதி செய்கிறது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், நூலாசிரியர் கணியன் பாலன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகி துரையரசன் உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்களும், கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.