திருப்பூர்,
இந்தியாவில் சாலைப் போக்குவரத்து மோட்டார் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 6 கோடிப் பேரின் வாழ்வாதாரத்தைப் பறித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதற்கு வழி செய்யும் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவை மோடி அரசு கைவிட வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் மோட்டார் தொழில் சார்ந்தோரின் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக திருப்பூரில் நடைபெற்ற எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மோடி அரசுக்கு எதிராக கண்டனம் முழங்கினர். தமிழகத்தில் பேருந்து, ஆட்டோ, டாக்சி, மேக்சிகேப், டெம்போ, சிறிய சரக்கு வாகனம், லாரி, கன்டெய்னர், ஒர்க்சாப் தொழிலாளர் என சாலைப்போக்குவரத்து தொழிலில் நேரடியாகவும், சார்பு தொழிலிலும் மொத்தம் 40 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வாகன பெர்மிட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பணிகளை மாநில அரசிடம் இருந்து பறித்து பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு வழிவகை செய்யும் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவை பாரதிய ஜனதா அரசு நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தில் ஆகஸ்ட் 7ஆம் தேதி செவ்வாயன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த பல்வேறு சங்கங்களை உள்ளடக்கிய, தமிழக மோட்டார் வாகனத் தொழில் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்திருந்தது.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் பேருந்து, ஆட்டோ, சரக்கு வேன் உள்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டன. அத்துடன் இருசக்கர வாகன பழுதுநீக்கம், நான்கு சக்கர வாகன பழுதுநீக்கம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஒர்க்ஷாப்புகளும் மூடப்பட்டன. 40க்கும் மேற்பட்ட இரண்டாந்தர கார், வாகன விற்பனையாளர்களின் அலுவலகங்களும் மூடப்பட்டன. அதேபோல் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு பயிற்சி அளிப்பதை நிறுத்
தினர். வாகன உதிரி பாகங்கள் விற்பனையாளர்களும் கடையடைப்பு நடத்தி இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். மோட்டார் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து நடத்திய வலிமையான போராட்டம் மகத்தான வெற்றியைப் பெற்றது என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

இந்த வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக செவ்வாயன்று காலை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மோட்டார் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஒய்.அன்பு தலைமை ஏற்றார். இதில் இருசக்கர வாகனப் பழுது நீக்குவோர் நலச் சங்க கூட்டமைப்பின் தலைவர் ஏ.கே.எஸ்.செந்தில், பல்லடம் நாகராஜ், கார் ஒர்க்ஷாப் மோட்டார் வாகன பழுது நீக்குவோர் நலச்சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர் அண்ணாமலை, கார் விற்பனையாளர்கள் சங்க பொருளாளர் விக்டர், சிஐடியு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க மண்டலச் செயலாளர் பி.செல்லதுரை, தொமுச அரசுப் போக்குவரத்து சங்க மண்டலச் செயலாளர் சென்னியப்பன், எச்எம்எஸ் செயலாளர் முத்துசாமி, எம்எல்எப் செயலாளர் பாண்டியராஜன், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் அ.பெருமாள், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் என்.சேகர், சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எம்.சந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், மோட்டார் சங்க மாவட்டத் தலைவர் விஸ்வநாதன், ஏஐடியுசி மோட்டார் சங்க தலைவர் சுரேஷ், செயலாளர் சசிகுமார், கார் ஒர்க்ஷாப் சங்கத் தலைவர் சாமிநாதன், ஓட்டுநர் பயிற்சி பள்ளி தலைவர் ரித்தீஷ், பொருளாளர் அன்பழகன், ஆட்டோ சங்க தலைவர் சுகுமாரன், செயலாளர் சிவராமன், ஆட்டோ பொது சங்கச் செயலாளர் யூனஸ் உள்பட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு எழுச்சி மிகு முழக்கம் எழுப்பினர்.

உடுமலை
உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எல்பிஎப் சங்கத்தின் மாவட்டத் தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் விஸ்வநாதன், தெண்டபாணி, ஏஐடியுசி சங்கத்தின் சார்பில் சொளந்தா்ராஜ், பாட்டாளி சங்கத்தின் ராமசாமி உள்ளிட்ட திரளான தொழிலாளா்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.