சென்னை,
சென்னை துரைப்பாக்கம் ஸ்டேட் பேங்க்காலனியை சேர்ந்தவர் பென்ரீகன் (37). சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜியின் வழியனுப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் மாலை 4 மணியளவில் தனது ‘வோக்ஸ்வேகன்’ சொகுசு காரில் பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி.நகர், டி.ஜி.எஸ்.தினகரன் சாலை வழியாக பென்ரீகன் வேகமாக சென்றார்.

அப்போது அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. அதே வேகத்தில் 3 மோட்டார் சைக்கிள்கள், ஒரு சரக்கு ஆட்டோ ஆகியவற்றின் மீதும் மோதியது. அப்போது, விபத்து நடந்த பகுதியின் அருகே பேருந்துக்காக காத்திருந்தவர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காரை வேகமாக ஓட்டி வந்த வழக்கறிஞரை அடித்து  உதைத்தனர். கண் இமைக்கும் நேரத்துக்குள் நடந்த இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். ஏழுகிணறு பகுதியை சேர்ந்த அமீர்ஜகான் (35), சைதாப்பேட்டை அபுதா கீர் (32), மயிலாப்பூர் அருண் பிரகாஷ் (25), பழைய வண்ணாரப்பேட்டை இளையராஜா (39), கீழ்ப்பாக்கம் கார்டன் மார்க்கெரட் (25), நாமக்கல் மாவட்டம் பிரகாஷ் (39). படுகாயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்ததும் அடையாறு போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் சோபனா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். விபத்துக்கு காரணமான வழக்கறிஞர் பென்ரீகன் கைது செய்யப் பட்டார்.போலீஸ் விசாரணையில் அவர் குடிபோதையில் கார் ஓட்டியது தெரியவந்தது. அவர் மீது குடித்து விட்டு கார் ஓட்டியது, வேகமாக கார் ஓட்டியது, கவன குறைவு உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்தில் காயம் அடைந்தவர்களில் அமீர்ஜகான், அபுதாகீர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி செவ்வாயன்று காலை உயிரிழந்தனர். அமீர்ஜகான் ஏழுகிணறு குட்டி மேஸ்திரி தெருவை சேர்ந்தவர். ‘பிசியோதெரபிஸ்ட்’ ஆக வேலை பார்த்து வந்தார். அபுதாகீர் சைதாப்பேட்டை துரைசாமி 2-வது தெருவை சேர்ந்தவர். படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் கீழ்ப்பாக்கம் கார்டன் மார்க்கெரட் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வழக்கறிஞர் ஒருவரே குடித்து விட்டு கார் ஓட்டி மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்தி இருப்பது காவல்துறையினரையும் பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.