புதுதில்லி:
வீடுகளுக்கான சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் மிகப்பெரிய ஒப்பந்தத்தை, பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான கவுதம் அதானி கைப்பற்றியுள்ளார்.அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் செய்வதற்கான ஒப்பந்த ஏலம் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைப்பெற்ற நிலையில், அதில் 11 நகரங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தத்தைக் அதானி குழுமம் தட்டிச் சென்றுள்ளது.
இதன்மூலம் அலகாபாத் உள்ளிட்ட 11 நகரங்களில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவையும், குடும்பங்களுக்குச் சமையல் எரிவாயுவையும் சில்லரை விற்பனையில் அதானி குழுமம் விநியோகிக்கும்.

குஜராத் மாநிலத்தின் சுரேந்திர நகர், பர்வாலா, நவ்சாரி, கேடா, போர்பந்தர் மாவட்டங்களும், ஒடிசாவின் பாலசூர், கேரளத்தின் கண்ணூர், பீகாரின் கயா, உத்தரப்பிரதேசத்தின் புலந்த்சாஹர் மற்றும் அலகாபாத் ஆகிய நகரங்களே அதானி குழுமம் எரிவாயு விநியோகத்தில் ஈடுபடப்போகும் நகரங்களாகும்.

இதில், நேரடியாக 6 நகரங்களிலும், இந்தியன் ஆயில் கார்ப்பொரேசன் நிறுவனத்துடன் இணைந்து 5 நகரங்களிலும் அதானி குழுமம் எரிவாயுவை விநியோகம் செய்ய உள்ளது. குஜராத் மாநிலத்தில் மட்டும் 5 நகரங்களில் எரிவாயு விநியோகித்தை அதானி குழுமம் தன்கைவசம் கொண்டு வந்துள்ளது.இதேபோல, பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பொரேசன் 4 நகரங்களிலும், பாரத் கேஸ் ரிசோர்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் 6 நகரங்களிலும், டோரண்ட் கேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 6 நகரங்களிலும், கெயில் கேஸ் நிறுவனம் 3 நகரங்களிலும் எரிவாயு விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: