சென்னை,

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி இன்று வயது மூப்பின் காரணமாக சிசிக்சை பலனின்றி உயிரிழந்தார்.

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக  தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து அன்று நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலையை 24 மணி நேரமும் சிறப்பு மருத்துவ குழுவினர் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 29-ம் தேதி மாலை கருணாநிதிக்கு திடீரென இதயத்துடிப்பு குறைந்தது. உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் படிப்படியாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 31-ம் தேதி காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘கல்லீரல் செயல்பாடு, ரத்த ஓட்டத்தில் உள்ள பிரச்சினைக்காக கருணாநிதி இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையில் கருணாநிதியின் உடல் நிலை குறித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் பிரதமர் தேவகவுடா, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாரம்யெச்சூரி, கேரள முதல்வர் பிரனாயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு, பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் நேரில் வந்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி, மற்றும் அவரது குடும்பத்தினர் நலம் விசாரித்து சென்றனர்.

தொடர்ந்து 11 நாட்களாக மருத்துவ குழுவினரின் கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று  கருணாநிதி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனையில் செயல் இயக்குநர் மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார், அதில்  , ”முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரின் வயதுமூப்பின் காரணமாக முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது.

மருத்துவ உதவிகளுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து கருணாநிதி கண்காணிக்கப்படுவார். அடுத்த 24 மணி நேரத்திற்கு அவரின் உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதைப் பொறுத்தே கணிக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மீண்டும் திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு குவியத்துவங்கினர். இதையடுத்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மருத்துவமனைக்கு சென்ற வண்ணம் இருந்தனர். இதைத்தொடர்ந்து இன்றும் அவருக்கு  மருத்துவ மனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் மீண்டும் இன்று பிற்பகல்  கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக  காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. மேலும் போதிய மருத்துவ சிகிச்சைக்கு பின்னரும் அவரது முக்கிய உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து வருகின்றன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. மருத்துவமனையின் அறிக்கைக்கு பின்னர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் கோபாலபுரம் இல்லம் திரும்பினர்.

இதற்கிடையில் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர்  சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து திரையங்குகள் மூடப்பட்டன. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதையடுத்து இன்று மாலை 6.42 மணியளவில் காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதியின் உயிர் 6.10 மணியளவில் பிரிந்ததாக அறிவித்தது.

 

Leave a Reply

You must be logged in to post a comment.