தீக்கதிர்

கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் கோரிக்கை

கடலூர்,
மாற்றுத்திறனாளி களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தச் சங்கத்தின் மாவட்ட மாநாடு கடலூரில் மாவட்டத் தலைவர் ஜெ.ராஜா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர்கள் வி.வசந்தி, ஏ.திருமூர்த்தி, இணைச் செயலாளர்கள் எஸ்.ஜீவா, எஸ்.வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் பி.ஜான்சிராணி சிறப்புரையாற்றினார். அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கோ.மாதவன் வாழ்த்துரை வழங்கினார். மாநாட்டில், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான புதிய சட்ட விதிகளை வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும், 40 விழுக்காடு ஊனமுள்ள அனைவருக்கும் மாத உதவித் தொகை வழங்க வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் 4 மணிநேரம் வேலை வழங்கி முழு ஊதியம் வழங்க வேண்டும், கல்வியில் 5 விழுக்காடும், வேலைவாய்ப்பில் 4 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், பெண் மாற்றுத் திறனாளிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆளவந்தார், பொருளாளர் ராம.நடேசன், துணைத் தலைவர் வி.கல்யாணசுந்தரம், இணைச் செயலாளர் பி.முருகையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.