கோவை,
வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்காமல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்கும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ரயில்வே ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் கோட்ட ரயில் ஓட்டுநர்கள் சங்கத்தின் பொதுமகாசபை கோவையிலுள்ள தாமஸ்கிளப்பில் செவ்வாயன்று நடைபெற்றது. அகில இந்திய ஓடும் தொழிலாளர் கழகத்தின் சேலம் கோட்ட செயலாளர் பி.எஸ்.ஜி.பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த மகாசபையை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி.கருணாகரன் துவக்கி வைத்து உரையாற்றினார். செயலாளர் வி.வி.மது அறிக்கையை முன்வைத்து பேசினார். ஓடும் தொழிலாளர் கழகத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், தென்மண்டல உதவி தலைவர் விஜயகுமார், டிஆர்இயு சங்கத்தின் கே.குருசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக, கோவை ரயில்நிலைய முதலாவது நடைமேடையில் இச்சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ரயில்வேயில் காலியாக உள்ள 2.5 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஓடும் தொழிலாளர்களுக்கு உரிய ஓய்வு அளித்திட வேண்டும். ரயில்வே துறையை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிடவேண்டும். ரயில்வே ஓட்டு நர்களுக்கு குறைந்தபட்ச பயணப்படியை 7 ஆவது சம்பள கமிசனின் பரிந்துரைப்படி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.