தீக்கதிர்

இளமை மாறாத தமிழ் மொழி: விஐடி வேந்தர்

வேலூர்,
உலகில் உள்ள மொழிகளில் இளமை மாறாமல் இருப்பது தமிழ் மொழி என விஐடிவேந்தர் ஜி.விசுவநாதன் பேசினார். விஐடியில் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழா நடந்தது. மன்ற நிர்வாகிபேராசிரியர் மரியசெபாஷ்டின் வரவேற்றார். நிகழ்ச்சியில் பாரதிதாசனின் பேரன் கவிஞர் பாரதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பாவேந்தர் பாரதிதாசன் தமிழ்இலக்கிய மன்றத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மன்றத்தின் புதிய நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி கடந்தாண்டு மன்றப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்களை ஒரு முறை படித்துவிட்டால் தமிழன் என்ற பெருமை வந்துவிடும். உலகில் தொன்மையான மொழிகளில் மாறாமல் இருப்பது தமிழ் மொழி ஒன்றுதான். சீன மொழி நமது தமிழ் மொழியை விட 500 ஆண்டுகள் பின் தங்கியவையாகும். உலகில் உள்ள மொழிகளில் இளமை மாறாமல் இருப்பதும் தமிழ் மொழியாகும். அதன் வளமையுடன் யாராலும் போட்டிபோட முடியாது.இன்று தமிழர்களே தமிழைகைவிடும் நிலை வந்து விட்டது. சுத்தமான தமிழ்மொழியை கேட்க வேண்டுமானால் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், போன்ற நாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.நாம் தமிழை கேடயமாக பயன்படுத்தினால் நமக்கு வெற்றி கிட்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பாரதிதாசனின் பேரன் கவிஞர் பாரதி பேசுகையில், “என் இனிமை தமிழ்மொழி என்ற பாடலை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எல்லா மேடைகளிலும் பாடி செல்வார். கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் தமிழ் மொழி வளர்ச்சிக்காக உலகளாவிய இயக்கம் தொடங்கியுள்ளது பாராட்டுக்குரியது” என்றார். நிகழ்ச்சியில் பேராசிரியர் அப்துல்காதர், வி.ஐ.டி. சமூக அறிவியல் மற்றும் மொழிகள் பள்ளி டீன் ரேவதி, வேலூர் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் புலவர் பதுமனார் சுகுமார், மன்ற நிர்வாகிகள் சுதாகரன், பாலாஜி, செல்வகணபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனையொட்டி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.