முசாபர்பூர்;
முசாபர்பூர் காப்பகச் சிறுமிகளை, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிராஜேஷ் தாக்கூர், சிறையில் அடைக்கப்படாமல், மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரிலுள்ள குழந்தைகள் காப்பகத்தில், 34 சிறுமியர் மயக்க மருந்து கொடுத்து, வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமை நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த வன்கொடுமை தொடர்பாக காப்பகத்தை நடத்திவந்த பிராஜேஷ் தாக்கூர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிராஜேஷ் தாக்கூர் தனது உடல்நிலையைக் காரணம்காட்டி சிறை செல்வதிலிருந்து தப்பித்துள்ளார். முசாபர்பூரிலுள்ள ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு 3 வாரங்கள் சிகிச்சை பெற்ற பிராஜேஷ் தாக்கூர், தற்போது முசாபர்பூர் மாவட்ட சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

பிராஜேஷூக்கு சர்க்கரை வியாதி உள்ளது; இரத்த அழுத்தமும் சீராக இல்லை; இதனால் அவருக்கு மாரடைப்பு ஏற்படலாம் என்று அஞ்சப்படுவதால் சிறை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சிறை கண்காணிப்பாளர் ராஜீவ்குமார் ஜா கூறியுள்ளளார். மேலும் ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பரிந்துரை அடிப்படையிலேயே பிராஜேஷூக்கு சிகிச்சை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.