சேலம்,
அடிப்படை வசதிகள் தொடர்பான பொதுமக்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தி வரும் அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி 8வது வார்டு ராம்நகர், காளியம்மன் நகர் பகுதியில் கடந்த மூன்று மாதமாக அடிப்படை வசதிகளான மின்சாரம், சாக்கடை வசதி சரிசெய்யப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியே நடக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வயதானவர்கள் குழிகளுக்குள் விழுந்து காயம் ஏற்படும் நிலை தொடர்ச்சியாக உள்ளது. இதுகுறித்து பல முறை பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும், முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டப்பட்டு வந்தது.இந்நிலையில் இப்பிரச்சனையை சரிசெய்ய வலியுறுத்தி செவ்வாயன்று பேரூராட்சி அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்ணீர் அஞ்சலி விளம்பர தட்டி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் கந்தசாமி, காளியம்மன் நகர் கிளை செயலாளர் சத்தியகாந்த், ராம்நகர் செயலாளர் அசோக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.