ஈரோடு,
சத்தியமங்கலம் அருகே பராமரிப்பு இல்லாததால் மதுக்கூடமாக மாறி வரும் சமுதாய நலக்கூடத்தை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள டி.ஜி.புதூர் காளியூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. இதன்மூலம் அப்பகுதி மக்கள் தங்களது வீட்டு சுப நிகழ்ச்சிகள் நடத்த பயன்படுத்தி வந்தனர். ஆனால் நாளடைவில் சமுதாயக்கூடம் முறையாக பராமரிக்கப்படாததால் கட்டிடம் பழுதடைந்தது. இதனால் பொதுமக்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பராமரிப்பின்றி இருக்கும் கட்டிடத்தை அப்பகுதியைச் சேர்ந்த போதை ஆசாமிகள் மதுக்குடிக்கும் இடமாக மாற்றிவிட்டனர். மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைப்பதும், அவ்வழியாக செல்லும் பெண்களிடம் தகராறு செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதையடுத்து சமுதாய நலக்கூடத்தில் உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால், சமுதாய நலக்கூடம் பேரூராட்சி கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து காளியூர் கிராம மக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர். இதில் மதுக்கூடமாகவும், சட்டவிரோத செயல்களின் புகழிடமாக மாறிவரும் சமுதாய நலக்கூடத்தில் உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.