திருப்பூர்,
அவிநாசி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் பொதுமக்கள் நடத்திய காத்திருக்கும் போராட்டத்தை தொடர்ந்து குடிநீர், தெருவிளக்கு பிரச்சனைக்களுக்கு அதிகாரிகள் உடனடியாக தீர்வு கண்டனர்.

அவினாசி ஒன்றியம், நடுவச்சேரி ஊராட்சி புதுக்காலனியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். இங்கு 6 மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் இல்லாததால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். குறிப்பாக, குடிநீர் விநியோகம் ஒரு பகுதியில் உள்ள குழாய்களுக்குச் செல்வதில்லை. மேலும், ஏற்கனவே போடப்பட்டுள்ள ஆழ்குழாயில் மின் மோட்டார் பொருத்தாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் ஒரு நாள் வருமானத்தை இழந்து வெளியூர் சென்று குடிநீரை விலைக்கு வாங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.  இதேபோல், தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் பெண்கள் பெரிதும் அச்சத்துடன் அப்பகுதியை கடக்க வேண்டியுள்ளது. ஆகவே, புதுக்காலனி ஆழ்குழாயில் மின் மோட்டார் பொருத்தியும், நல்ல தண்ணீரை முறையாக விநியோகம் செய்ய வேண்டும். பழுதடைந்த தெருவிளக்குகளைச் சரி செய்துவதுடன், தேவையான இடங்களில் புதிய தெருவிளக்குகள் அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று நடுவச்சேரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கட்சி தீர்மானித்தது.

இதன்படி தொடங்கிய காத்திருக்கும் போராட்டத்திற்கு கட்சியின் கிளைச் செயலாளர் பி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில் புதுக்காலனியைச் சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். இப்போராட்டம் தொடங்கியவுடன் அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக ஆழ்குழாயில் மின்மோட்டார் உடனடியாக பொருத்தப்பட்டது. நல்ல தண்ணீர் நீர்த்தேக்கத் தொட்டியில் விடப்பட்டு, விநியோகம் செய்யவும், தெருவிளக்குகள் அமைத்து தரவும் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அத்துடன் பணிகளும் உடனடியாக துவங்கப்பட்டது. கோரிக்கைகளை நிறைவேற்றத் தொடங்கியதை அடுத்து, காத்திருக்கும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி தற்காலிகமாக தள்ளி வைத்தது. முன்னதாக, இப்போராட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்க முன்னாள் ஒன்றிய செயலாளர் என்.சி.பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய கமிட்டி உறுப்பினர் ஆர்.பழனிச்சாமி, கிளைச் செயலாளர் லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.