திருப்பூர்,
ஆதிக்க சக்தியினர் மிரட்டல் விடுப்பதால் உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி சத்துணவு சமையலர் பாப்பாளின் கணவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசிவட்டம் திருமலைக்கவுண்டன்பாளையம் கிராம உயர்நிலைப் பள்ளி சத்துணவு சமையலரான பாப்பாள், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அப்பகுதியைச் சேர்ந்த சாதி ஆதிக்க சக்தியினர் அவரை பணி செய்யவிடாமல் தடுத்தனர். குறிப்பாக, அவர்சமைத்த உணவை தங்களது குழந்தைகளுக்கு வழங்கக்கூடாது என மிரட்டல் விடுத்து பள்ளியை திறக்க விடாமல் தகறாரில் ஈடுபட்டனர். இதுகுறித்து சேவூர்காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கடந்த 2 ம் தேதி அப்பகுதியில் வசிக்கும் ஆதிக்கசாதியைச் சேர்ந்த நபர் ஒருவர்,எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி, உங்களை பொய் வழக்கில் சிக்க வைக்காமல் விடமாட்டேன் என மிரட்டல் விடுத்து சென்றார். இதனால் அங்கு குடியிருக்கவே அச்சமான சூழ்நிலை உள்ளது. ஆகவே, எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டும் எனக்கோரி பாதிக்கப்பட்ட பாப்பாளின்  கணவர் பழனிச்சாமி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் நந்தகோபால் உள்ளிட்ட தலித் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் திங்களன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: